உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டி கவுமாரியம்மன் கும்பாபிஷேக ஏற்பாடுகள்: பல லட்சம் பக்தர்கள் பங்கேற்க வாய்ப்பு!

வீரபாண்டி கவுமாரியம்மன் கும்பாபிஷேக ஏற்பாடுகள்: பல லட்சம் பக்தர்கள் பங்கேற்க வாய்ப்பு!

தேனி: தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில்,கும்பாபிஷேக விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பதால், முழு வீச்சில் முன் ஏற்பாடு பணிகள் நடந்து வருகிறது. தேனியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கோயில், பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. கவுமாரியம்மன், சுயம்புவாக தோன்றிய கோயில். அம்மன் பூஜித்த சிவலிங்கத்திற்கு, திருக்கண்ணீசுவரர் என பெயரிட்டார். இரண்டு கோயில்களும் இங்கு உள்ளன. பிப்.,9 ல் காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் கண்ணீஸ்வரமுடையார் கோயிலிலும், காலை 11 மணி முதல் 11.45 மணிக்குள் கவுமாரியம்மன் கோயிலிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த பல மாதங்களாக பணிகள் நடந்து வருகிறது.

கல் மண்டபம் சுத்தம் செய்யப்பட்டு, "பாலியூரித்திரின் பூச்சு பூசப்பட்டுள்ளது. இதனால், எண்ணெய் கூட சுவரில் ஒட்டாது. கோபுரம் உள்ளிட்ட சிற்பங்களுக்கு வர்ணம் பூசப்பட்டுள்ளது. கவுமாரியம்மன் கோயிலில் உள்ள யாகசாலை மண்டபத்தில், 7 வேதிகை, 15 குண்டம் அமைக்கப்பட்டுள்ளது. கண்ணீஸ்வரமுடையார் கோயிலில்,5 வேதிகை, 5 குண்டம் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், ராஜாபட்டர் தலைமையில் 75 வேதவிற்பன்னர்கள் யாகசாலை பூஜை நடத்தி, கும்பாபிஷேகம் நடத்துகின்றனர்.

கும்பாபிஷேகம் முடிந்தவுடன், பக்தர்கள் மீது, புனிதநீர் தெளிக்க, அம்மன் கோயிலில் 6 நீர் தெளிப்பான் இயந்திரங்களும், கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் 21 நீர் தெளிப்பான் இயந்திரங்களும் நிறுவப்பட்டுள்ளன. கும்பாபிஷேகம் முடிந்தவுடன், ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். கும்பாபிஷேகத்திற்காக, காசி,ராமேஸ்வரம், வைகை, சுருளி உள்ளிட்ட நதிகளில் இருந்து புண்ணிய தீர்த்தங்கள், வீரபாண்டி ஊரில் இருந்து யானை மீது தீர்த்தங்கள் வைத்து, ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது. யாகசாலை பூஜை காலங்களில், வேதசிவாகம திருமுறை பாராயணங்கள் நடை பெறும். பிப்.,6,7 தேதிகளில், இரவு 8.30 மணிக்கு மேல், ஆன்மிக சொற்பொழிவும், கும்பாபிஷேகம் முடிந்த அன்று மாலையில், வீரபாண்டி ஊரில் இருந்து, கலை நிகழ்ச்சிகளுடன் அம்மன் வீதி உலாவும் நடைபெறும்.கும்பாபிஷேகத்திற்காக, கோயிலில் முழுவீச்சில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

பெரியாற்றில் நீர் திறக்கப்படுமா?: கும்பாபிஷேகம் நாள் அன்று, பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டால், நீராடும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பதால், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், விரிவான முறையில் செய்து தர வேண்டும். கும்பாபிஷேகத்தை முன்னிட்டாவது, போடி விலக்கில் இருந்து வீரபாண்டி கோயில் வரை உள்ள குண்டும், குழியுமான ரோட்டை சீர்படுத்தினால் நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !