ஆற்றுகால் பொங்கல் விழா பிப்.8ல் தொடக்கம்!
நாகர்கோவில்: பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பொங்கல் விழா வரும் எட்டாம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை பத்து நாட்கள் நடக்கிறது. மதுரையை எரித்த கண்ணகி கொடுங்கல்லூர் செல்லும் வழியில் திருவனந்தபுரம் அருகே கிள்ளிகாற்றின் கரையில் தங்கியிருந்ததாகவும், இப்பகுதியை சேர்ந்த முதியவர் கனவில் வந்து தனக்கு கோயில் கட்ட கூறியதன் பேரில் இங்கு கோயில் கட்டப்பட்டு ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் என பெயர் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. இங்கு மாசி மாதம் நடைபெறும் பொங்கல் விழாவின் போது கண்ணகி வரலாற்றை குறிக்கும் தோற்றம் பாட்டு பாடப்படுகிறது. இ ங்கு நடைபெறும் முக்கிய நடைபெறும் முக்கிய திருவிழா மாசி பொங்கல் விழா. ஒரே நாளில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிடும் நிகழ்ச்சி கின்னஸ் புத்தகத்திலும இடம் பெற்றுள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் விழா வரும் எட்டாம் தேதி தொடங்குகிறது. அன்று காலை 7.45 மணிக்கு அம்மனை காப்புக்கட்டி குடியிருந்தும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. அன்று முதல் தினமும் காலையில் நிர்மால்யதரிசனம். அபிஷேகம், உஷபூஜை, உஷஸ்ரீபலி, மதியம உச்சபூஜை, இரவு அத்தாழபூஜை, அத்தாழஸ்ரீபலி ஆகியவை நடக்கிறது. எட்டாம் தேதி மாலை நான்கு மணிக்கு கஜமேளா என்ற யானைகள் அணிவகுப்பு நடக்கிறது. 10-ம் தேதி காலை 10.30-க்கு குத்தியோட்ட விரதம் தொடங்குகிறது. 14-ம் தேததி காலை 11-க்கு ஆயில்யபூஜை நடக்கிறது. 16-ம் தேதி ஒன்பதாம் நாள் விழாவில் காலை 10.30-க்கு பொங்கல் விழா நடக்கிறது. பகல் 2.30-க்கு பொங்கல் நிவேத்யம் நடக்கிறது. இரவு 10.30-க்கு தேவி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 17-ம் தேதி இரவு 9.30-க்கு காப்பு அவிழ்க்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
இதுகுறித்து திருவிழா கூட்டு கண்வீனர் பரமேஸ்வரன்தம்பி கூறியதாவது: இந்த ஆண்டு பொங்கல் விழாவில் கலை நிகழ்ச்சிகளை குறைத்து பக்தர்களுக்கான வசதிகளை அதிகப்படுத்தியுள்ளோம். தினமும் 30 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. முதன் முறையாக கஜமேளா என்ற யானைகளின் அணிவகுப்பு நடக்கிறது. ஏழை மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுகிறது. 15, 16 தேதிகளில் ஸ்பெஷல் ரயில்களும், பஸ்களும் பல்வேறு ஊர்களில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இயக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.