உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்துணர்வு முகாமில் பங்கேற்று மெலிந்து விட்ட பழநி யானை கஸ்தூரி!

புத்துணர்வு முகாமில் பங்கேற்று மெலிந்து விட்ட பழநி யானை கஸ்தூரி!

பழநி: மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமிலிருந்து வந்த, பழநி கோயில் யானை கஸ்தூரிக்கு, மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முகாமிற்கு சென்றுவந்த யானை 135 கிலோ எடை குறைந்துள்ளது. கோவை, மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமிற்காக, டிச., 18 ல், பழநி பெரிய நாயகியம்மன் கோயில் யானை கஸ்தூரி அழைத்து செல்லப்பட்டது. 47 வயதான கஸ்தூரி முகாமிற்கு சென்ற போது, 4,975 கிலோ எடை இருந்தது. தற்போது 135 கிலோ எடை குறைந்து, 4,840 கிலோவாக உள்ளது. மற்ற யானைகள் வாகனங்களில் ஏற, உதவிய கஸ்தூரி யானை கடைசியாக புறப்பட்டு, நேற்று காலை 10:00 மணிக்கு பழநிக்கு வந்தது. கஸ்தூரியை, ஊர்வலமாக, பெரிய நாயகியம்மன் கோயிலுக்கு அழைத்து வந்தனர். அங்கு, வெள்ளிக் கொழுசு, தங்க முலாம் பட்டை, புத்தாடை அணிவிக்கப்பட்டு, மேளதாளங்கள் முழங்க, ஆராத்தி எடுக்கப்பட்டது. அதன் பின், கோயில் வெளிப்பிரகாரத்தை வலம் வந்த கஸ்தூரி கொடிமரத்தை விழுந்து வணங்கியது. வழக்கமான இடத்திற்கு யானையை அழைத்து செல்லப்பட்டது. கால்நடை மருத்துவர் சக்திவேல்பாண்டி கூறுகையில் வனச்சூழல் நிறைந்த புத்துணர்வு முகாமில், கஸ்தூரி யானை மற்ற யானைகளுடன் நன்றாக பழகியது. தினமும், உடற்பயிற்சி, இயற்கை முறையில் சத்தான உணவு போன்ற காரணங்களால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் குறைந்து, யானை புத்துணர்ச்சியுடன், ஆரோக்கியமாக உள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !