திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித்திருவிழா, இன்று காலை (பிப்.,6) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழா பிப்., 16 ல் தெப்பத் திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது. முருகன் கோயில் நடை இன்று அதிகாலை 1:00 மணிக்கு திறக்கப்படுகிறது. 1:30 க்கு விஸ்வரூப தரிசனமும், 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. காலை 6 முதல் 6:30 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது. பின்னர், அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் திருவீதிஉலா நடக்கிறது. இரவு ஸ்ரீபெலி நாயக்கர், அஸ்திரதேவருடன் தந்த பல்லக்கில் எழுந்தருளி, 9 சன்னதிகளில் திருவீதி உலா நடக்கவுள்ளது. பிப்., 10 ல் மேலக்கோயிலில், இரவு 7:30 க்கு குடவருவாயில் தீபாரதணையும், சுவாமியும், அம்பாளும், தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வருகின்றனர். பிப்., 11 ல் காலையில் கோ ரதமும், இரவில் வெள்ளி ரதத்தில் சுவாமி வீதி யுலாவும் நடக்கிறது. பிப்., 12 ல், காலை 4:30 க்கு சண்முக பெருமானின் உருகு சட்ட சேவையும், காலை 9:00 மணிக்கு வெட்டி வேர் சப்பரத்தில் சுவாமி பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாரதணை நடக்கிறது. மாலை 4:30 க்கு சுவாமி சிவப்பு சாத்தி, தங்க சப்பரத்தில் வீதியுலா நடக்கிறது. விழாவின் 8 நாளான, பிப். பிப்., 13 ல், வெள்ளி சப்பரத்தில் சுவாமி வெள்ளை சாத்தி வீதியுலா வருகிறார். பின் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாரதனை நடக்கிறது. காலை 11.30 மணிக்கு பச்சை கடைசல் சப்பரத்தில், சுவாமி பச்சை சாத்தி வீதியுலா வருகிறார். பிப்.,14ல், தங்க கைலாய பர்வத வாகனத்தில் சுவாமியும், வெள்ளி கமல வாகனத்தில் அம்பாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். பிப்., 15 ல், காலை 6:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. பிப்., 16 ல், தெப்பத்திருவிழாவுடன், மாசித் திருவிழா நிறைவு பெறுகிறது.