மாசாணியம்மன் கோவில் அருகில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து போடப்பட்ட கடைகள், கோவில் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை, பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவிற்கு இன்னும் சில தினங்களே உள்ளன. விழாவிற்கான முன்னேற்பாட்டு பணிகளில் அனைத்துத்துறை அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். மாசாணியம்மன் கோவிலை சுற்றி 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து கடையின் முன் பகுதியை அமைத்து இருந்தனர். இதனால்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர்.இந்நிலையில், பொள்ளாச்சி சப்-கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே உத்தரவின்படி, ஆனைமலை பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.நேற்று கோவில் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி சம்பந்தபட்டவர்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. சிலர் தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர். அகற்றப்படாத கடைகளின் ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிர்வாகத்தினர், துப்புரவு பணியாளர்களை கொண்டு அகற்றினர்.