உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தைகளுக்கு கோவிலில் நாள் முழுவதும் பால்

குழந்தைகளுக்கு கோவிலில் நாள் முழுவதும் பால்

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க, வரிசையில் காத்திருக்கும் குழந்தைகளுக்கு, நாள் முழுவதும் பால் வழங்கப்படும், என, தேவஸ்தான செயல் அதிகாரி, எம்.ஜி.கோபால் தெரிவித்தார். திருமலையில், நேற்று நடைபெற்ற பக்தர்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில், பல ஊர்களிலிருந்தும், பக்தர்கள் தொலைபேசி மூலம் தங்களின் குறைகளை தெரிவித்தனர். நிகழ்ச்சி முடிந்த பின், எம்.ஜி.கோபால் கூறியதாவது: திருமலை காத்திருப்பு அறைகளில் உள்ள குழந்தைகளுக்கு, நாள் முழுவதும் பால் வழங்கப்படும். தேவஸ்தான கல்யாண மண்டபங்கள், இனி சுத்தமாக பராமரிக்கப்படும். ஆர்ஜித சேவையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும், தீர்த்த பிரசாதம் வழங்குவது மிக சிரமம். ஓய்வுபெற்ற ராணுவத்தினருக்கு, சிறப்பு தரிசனம் வழங்க முடியாது. திருமலையில், மாலை பஜனை நடத்த விருப்பமுள்ளவர்கள், தேவஸ்தானத்தை தொடர்பு கொள்ளலாம். ஆர்ஜித டிக்கெட்டுகள் தொலைந்து போனால், அனைத்து விவரங்களுடன் தேவஸ்தானத்தை தொடர்பு கொண்டால், மீண்டும் டிக்கெட் வழங்க, வழிவகை செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !