மாசாணியம்மன் குண்டம் திருவிழா மயான பூஜைக்கான பணிகள் தீவிரம்
ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை நடத்த, தேவையான மயான மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடத்து வருகிறது. ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், முக்கிய விழாக்களில் ஒன்றான மயான பூஜை வரும் 12ம்தேதி நள்ளிரவு 1.30க்கு நடக்கிறது. இதனையொட்டி விழாவிற்கான முன்னேற்பாட்டு வேலைகள் நடந்து வருகின்றன. இம்முறை மயான பூஜை நடைபெறும் இடம் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், இடவசதிக் குறைவாலும், சோமேஸ்வரன் கோவில் வளாகத்தில் நடக்க உள்ளது. இவ்விழாவில் நள்ளிரவு 1.30 மணிக்கு மேல் மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். மயான அருளாளி மற்றும் தலைமை முறைதாரர் உட்பட பல அருளாளிகள் அம்மனின் சூலம் மற்றும் பூஜை சாமான்களுடன் கோவிலில் இருந்து ஆழியாற்றங்கரையில், உள்ள மயானத்துக்கு வருவர். மயானத்தில் 8 அடி நீளத்துக்கு மயான மண்ணால் மாசாணியம்மனின் உருவம் சயனகோலத்தில் அமைக்கப்பட்டு இருக்கும். தற்போது புதிய இடத்தில் மயான பூஜை நடப்பதால், அதற்காக மயான மேடை அமைக்கும் வேலை வேகமாக நடைபெற்று வருகிறது. சோமேஸ்வரன் கோவில் வளாகத்தில் ஈசானிய மூலையில் 20 அடிக்கு 16 அடி பரப்பில் செங்கல்கள் கொண்டு மேடை கட்டப்பட்டுகிறது. மயான பூஜையில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். அவர்களை ஒழுங்குபடுத்த மூங்கில்களை கொண்டு தடுப்பு அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. மேலும் வரும் பிப்ரவரி 14ம் தேதி, குண்டம் பூ வளர்க்கும் நிகழ்ச்சி இரவு 10.00 மணிக்கு துவங்கி விடிய விடிய நடக்கும். அதற்காக 15 டன்னுக்கு அதிகமான விறகுகள் தேவைப்படும். அதற்கான விறகுகளை பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் குண்டத்திற்கு கொண்டு வந்து சேர்த்து வருகின்றனர்.