உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வறண்ட நிலையில் ஸ்ரீவி., திருமுக்குளம்: நடக்குமா தெப்ப திருவிழா!

வறண்ட நிலையில் ஸ்ரீவி., திருமுக்குளம்: நடக்குமா தெப்ப திருவிழா!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருமுக்குளத்தில், தண்ணீர் இல்லாததால், மாசி மக தெப்பத்திருவிழா நடக்க வாய்ப்பில்லாததால், பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்தாண்டாவது,குளத்தில் தண்ணீர் நிரப்பி, விழா நடத்த,கோயில் நிர்வாகம் முன் வர வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளம், பிரமிடை கவிழ்த்து வைக்கப்பட்டது போல் படித்துறை, நடுவில் மண்டபம் என, கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த குளம், ஆண்டாள் நீராடுவதற்காக கங்கை, யமுனை ,சரஸ்வதி போன்று புண்ணிய தீர்த்தமாக உருவாக்கப்பட்டது. இக்குளத்தின் அடிப்பாகத்தில், சுதர்சன ஆழ்வார் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த உருவத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் போது, சுதர்ன ஆழ்வார் திருமஞ்சனம் செய்த நீருக்குண்டான பாவம் நீக்கும் சக்தி கொண்டதாக, கருதப்படுகிறது. இங்கு குளித்தால் பாவம் நீங்கும் என்பது ஐதீகம். மேலும் இக்குளத்தில் இருந்து தான், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆண்டாளுக்கு தினமும் திருமஞ்சனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வந்தது. புனிதமான இக்குளத்தில், ஆண்டு தோறும் மாசிமகம் நட்சத்திரத்தையொட்டி, தெப்ப உற்சவம், மூன்று நாட்கள் நடை பெறுவது வழக்கம். முதல் நாளில் ஆண்டாள், ரெங்கமன்னார், இரண்டாவது நாளில் பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி,பெரியாழ்வார், காட்டழகர், மூன்றாவது நாளில் ராமர், லட்சுமணர், சீதை, கிருஷ்ணன், ருக்மணி, சத்யா பாமா, திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ஆகியோர், தெப்பத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கும். இதை பார்க்க, மாவட்டம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் வருவர். ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக, மழை இல்லாததால், வறண்ட நிலையில் உள்ளது. ஆண்டாள் கோயில் நிர்வாகமும், திருமுக்குளத்தில் ஆண்டு தோறும் தண்ணீர் இருக்கும் வகையில், கடந்தாண்டு, தனியார் நிறுவனத்துடன் இணைந்து 90 லட்ச ரூபாய் செலவில் போர்வெல் போட்டு தண்ணீர் நிரப்ப முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்குரிய பணிகள் இன்று வரை நடக்காதது பக்தர்களை வருத்தமடைய செய்துள்ளது. இந்தாண்டு மாசி மகம் 15ம் தேதி வருகிறது. தண்ணீர் இல்லாததால், தெப்பத்திருவிழா நடைபெற வாய்ப்பில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடையும் நிலை உள்ளது. இதை தவிர்க்க, குளத்தில் பண்ணீர் நிரப்பி, விழாவை சிறப்புற நடத்த கோயில் நிர்வாகம் முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !