காரமடை அரங்கநாதர் கோவில் தேர் வெள்ளோட்டம்!
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் சுவாமி கோவில் தேருக்கு, புதிதாக நான்கு இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. நேற்று வெள்ளோட்டம் நடந்தது. காரமடையில், மிகவும் பழமையான அரங்கநாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத் தேர்த்திருவிழா நடைபெறும். திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில், இந்த தேர் செய்ததாக கூறப்படுகிறது. இதில் ராமாயண கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து, சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. இத்தேரில் உள்ள இரண்டு சிறியது, நான்கு பெரியது என, ஆறு சக்கரங்களும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தன. தமிழக அரசு, தேர்களுக்கு இரும்பு சக்கரங்கள் அமைக்கும்படி உத்தரவிட்டது. அதன்படி காரமடை அரங்கநாதர் கோவில் நிர்வாகம் தேருக்கு, திருச்சி பெல் கம்பெனியில் இருந்து, ஏழே முக்கால் எடையுள்ள, இரும்பினால் செய்த, நான்கு பெரிய சக்கரங்கள், இரண்டு அச்சுகளை வாங்கி தேரில் பொருத்தியது. இரும்பு சக்கரங்களை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், தேரை வெள்ளோட்டம் விட வேண்டும் என, கோவில் நிர்வாகத்திடம் கூறினர். அதன்படி, நேற்று காலை தேர் வெள்ளோட்டம் நடந்தது. சக்தி இன்ஜினியரிங் கல்லூரி, ஆர்.வி., கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பங்கேற்று தேரை இழுத்தனர். தேர் இருந்த இடத்திலிருந்து 50 மீ., இழுத்துச் சென்று, மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.