உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோக ஹயக்ரீவர் கோவிலில் மாணவர்களுக்கு சிறப்பு அர்ச்சனை

யோக ஹயக்ரீவர் கோவிலில் மாணவர்களுக்கு சிறப்பு அர்ச்சனை

செங்கல்பட்டு: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் அதிகமாக மதிப்பெண் பெற, செட்டிப்புண்ணியம் யோக ஹயக்ரீவர் கோவிலில், மாணவர்கள் சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்கின்றனர். செங்கல்பட்டு அடுத்த, செட்டிப்புண்ணியம் கிராமத்தில், ஸ்ரீ யோக ஹயக்ரீவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற, வித்யா தோஷ நிவர்த்தி சங்கல்ப பூஜை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு, கடந்த ஜனவரி 5ம் தேதி, வித்யா தோஷ நிவர்த்தி சங்கல்ப பூஜை நடந்தது. இதில், ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த பூஜை மிகவும் விசேஷமானது. மாணவர்களுக்கு தேர்வில், ஏற்படும் பயத்தை போக்கவும்,ஞாபக மறதி இல்லாமல் இருக்கவும், அதிக மதிப்பெண்கள் பெறவும், பூஜை செய்யப்படுகிறது. பூஜையின் போது, பேனா, பென்சில் வைத்து அர்ச்சனை செய்யயப்படும். அதன் பிறகு, தரப்படும் ரட்சையை கையில் கட்டிக் கொண்டால், மாணவர்களுக்கு கல்வியில் மேம்பாடு உண்டாகும். இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும், மாணவர்கள் வந்து சுவாமியை வழிபட்டுச் செல்கின்றனர். தற்போது, வித்யா தோஷ நிவர்த்தி சங்கல்ப பூஜையில் செய்யப்பட்ட அர்ச்சனை பேனா, பென்சில்களை, மாணவர்களுக்கு, கோவில் நிர்வாகம் வழங்கி வருகிறது. இதனால், தினமும், மாணவர்களின் பெற்றோர், அரசு மற்றும் தனியார் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அச்சனைப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வீருபொம்மு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !