மணி மந்திர விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
திருப்புவனம்: திருப்புவனம் மணி மந்திர விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.திருப்புவனத்தில் வைகை ஆற்றின் தென்கரையில் பழமையான மணி மந்திர விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயில் தற்போது புதுப்பிக்கப்பட்டு, 62 ஆண்டுக்குப்பின் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு பணிகள் முடிந்தன.இங்கு தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, பாலமுருகன் சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளது. முதல் கால யாகசாலை பூஜை திங்களன்று மாலை 4 மணிக்கு துவங்கியது. இரண்டாம், மூன்றாம், நேற்று காலை நான்காம் கால யாக சாலை பூஜை நடந்தது. காலை 9.30 மணிக்கு மணிகண்டன் சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கலசங்களுடன் யாகசாலையை வலம் வந்தனர். காலை 9.55 மணிக்கு கருடன் வானில் வலம் வந்ததையடுத்து கும்பத்தில் நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். அதனைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.