கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு: குத்தகைக்கு விடப்பட்டது
தாடிக்கொம்பு: வேடசந்தூர் தாலுகா ஆர். புதுக்கோட்டையில் உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலம், தனியாரிடமிருந்து மீட்கப்பட்டு, குத்தகைக்கு ஏலம் விடப்பட்டது. கருப்பணசாமி , கன்னிமார் கோயிலுக்கு செந்தமான ஒரு ஏக்கர் 52 சென்ட் நஞ்சை நிலம், அதிலுள்ள 26 தென்னை மரங்கள் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, நிலத்தை நிர்வகித்தவர்கள் அனுமதியின்றி தனியாருக்கு கிரயம் செய்தனர். இது குறித்து பொதுமக்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர். அதிகாரிகள் பதிவுத்துறையில் பட்டா நகல் எடுத்து பார்த்ததில், அறநிலையத்துறை பெயரில் இருந்தது தெயவந்தது. இதையடுத்து அதிகாரிகள் நில அளவை அதிகாரிகளுடன் சென்று அளந்து கோயிலுக்கு சொந்தமான நிலத்தை உறுதி செய்தனர். இதை எதிர்த்து அனுபவம் செய்து வந்த பெருமாள் மதுரை ஐகோர்ட்டில் தடை உத்தரவு பிறப்பிக்க மனுதாக்கல் செய்தார். மனுவை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அறநிலையத்துறை ஆணையர் தனபால், இணை ஆணையர் முத்து தியாகராஜன், உதவி ஆணையர் ரமேஷ் ஆகியோர் குத்தகை ஏலம் விட உத்தரவிட்டனர். இதன்படி தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் அலுவலகத்தில் ஆய்வாளர் முருகையால, செயல் அலுவலர் வேலுச்சாமி முன்னிலையில் ஏலம் நடந்தது. வேடசந்தூரை சேர்ந்த சேகர், மூன்றாண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆண்டிற்கு ரூ. 11,000 க்கு ஏலம் எடுத்தார்.