திண்டுக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் ரங்கநாதபுரம் சீனிவாசப் பெருமாள் கோயிலில் 14 அடி உயர விஸ்வரூப ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. காலை சிறப்பு யாகசாலை பூஜையும், கும்பாபிஷேகமும் நடந்தது.
திண்டுக்கல்லில் இருந்து 5 கி.மீ., தூரத்தில் ரங்கநாதபுரம் மலைமீது ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலின் வடகிழக்கில் விஸ்வரூபமாக 14 அடி உயரத்தில் ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு கோயில்களின் கும்பாபிஷேகவிழா கடந்த திங்கள் கிழமை உலக நன்மை வேண்டி மகா சுதர்ஸன ஹோமத்துடன் துவங்கியது. திங்கள்கிழமை எஜமான் சங்கல்பம், பாலிகை பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை புனிதநீர் தெளித்தல், அக்னி பகவானை அழைத்தல், யாக குண்டங்கள் துவக்கம், கலச ஆவாஹனம் நடந்தது. இரண்டாம் நாளன்று (செவ்வாய்) புனித நீர் தெளித்தல், அக்னிபூஜை கும்பகலச பூஜை பிரதான வேள்வி, மஹா சாந்தி வேள்வி நடந்தது. இரவு 9.30 மணிக்கு வேள்வி நிறைவுபெற்றது பூர்ணா ஹீதி வேத திவ்விய பிரபஞ்சம், சாத்துமுறை நடந்தது. மூன்றாம் நாளன்று (19.2.14ல்) திருப்பள்ளி எழுச்சி, சுப்ரபாதம், கோ பூஜை நடந்தது. காலை 11.32 மணிக்கு மஹா சம்பரோஹனம் என்ற கும்பாபிஷேகம் நடந்தது. பகல் 12 மணிக்கு கலச ப்ரரோகணம் ஆசிர்வாதம், மஹா தீபாராதனை நடந்தது. ஸ்ரீராமன் பட்டாச்சார்யர் நிகழ்ச்சிகளை நடத்தினர். டாக்டர் சரஸ்வதி ராமநாதன் நேர்முகவர்ணனை ஆற்றினார் 20.2.2014 முதல் 7.4.2014-வரை மண்டல பூஜை நடைபெறும்.