பழநி மலைக்கோயிலில் மயில்களுக்கு ஆபத்து!
பழநி: பழநி மலைக்கோயிலில் உள்ள பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, மயில்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. பழநி மலைக் கோயிலில், மயில், மலைப்பாம்பு, குரங்கு மற்றும் பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்கின்றன. "வின்ச் ஸ்டேஷன், "ரோப்கார் ஸ்டேஷன், யானைப்பாதை ஆகிய பகுதிகளில் தினமும் ஏராளமான மயில்கள் உலா வருகின்றன. அவைகள், தானியம், பழங்கள், சிறிய வகை பூச்சிகள் போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்கின்றன. இவற்றால், பிற உயிரினங்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. இருப்பினும், மலைப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, சிலர் இவற்றை பிடித்து, ஆண் மயிலின் தோகைகளை பறிக்கின்றனர். சிலர் இவற்றை விலைக்கு விற்கின்றனர். கோயில்நிர்வாகமும், வனத்துறையினரும், மயில்களை பராமரிப்பதில் ஆர்வம் காட்டாததால், அவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. மயில்களின் முட்டை, தோகைகளை திருடுபவர்கள் மீது வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பழநிக்கு வந்து செல்லும் பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மயில்களை துன்புறுத்துவதும், வேட்டையாடுவதும் குற்றம். மலைக்கோயிலில் மயில்களின், தோகை, முட்டைகளை அபகரிக்கும் நபர்களை பிடிக்க வனத்துறை ஊழியர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவர், என்றார்.