அரக்காசியம்மாள் தர்ஹா 481ம் ஆண்டு சந்தனகூடு
கும்பகோணம்: கும்பகோணம் அரக்காசியம்மாள் தர்ஹாவில் 481ம் ஆண்டு சந்தனகூடு விழா நடந்தது. கும்பகோணம் காமராஜர் சாலையில் 480 ஆண்டுக்கு முன் ஆகாஸ்பீவி சாஹிபா வலியுல்லாஹீ எனப்படும் அரக்காசியம்மாள் என்பவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடத்தில் தர்ஹா எழுப்பப்பட்டு அங்கு இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், இந்து மதத்தினரும் சென்று நாள்தோறும் வழிபாடு நடத்தி வருகின்றனர். அரக்காசியம்மாள் நினைவு நாளில் சந்தன கூடு விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இரண்டு நாளுக்கு முன் இரவு அரக்காசியம்மாள் தர்ஹாவில் சந்தன கூடு விழா நடந்தது. முன்னதாக தர்ஹாவின் அறங்காவலர் ஷாஜகான் வீட்டிலிருந்து சந்தனகுடம் ஊர்வலமாக புறப்பட்டு பிச்சை பிராமணர் தெரு வழியாகச் சென்று தர்ஹாவிற்கு வந்தடைந்தது. தொடர்ந்து அனைத்து சமூகத்தினரும் பங்கேற்ற கூட்டு பிரார்த்தனை நடந்தது. பின்னர் அரக்காசிய்ம்மாளுக்கு மௌலூது ஷரீப் கொடியேற்றமும், பின்னர் ஷரீப் ஓதி, சந்தனம் பூசி, சந்தனக்கூடு நடந்தது. இந்நிகழ்ச்சியில், இம்ரான்கான், காரை அப்துல்ரஹீமான், அக்பர்அலி, குத்புல்குலாம்நசீர், சோழன்சாகுல், முகமதுஅலி, அனீஸ்ராஜா, ஆசாத், சர்தான்கான், வாசிம்அக்ரம்கான் அய்யம்பேட்டை சம்சுதீன் மற்றும் கும்பகோணம் வட்டார உலமா சபையினர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை தர்கா பரம்பரை அறங்காவலர் ஷாஜகான் தலைமையில் செய்திருந்தனர்.