ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றம்!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ராமேஸ்வரம் கோயிலில், காலை, சுவாமி சன்னதி முன்புள்ள கொடி கம்பத்தில் வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க, கோயில் குருக்கள் மோகன், மாசி மகா சிவராத்திரி விழாவுக்கான, கொடியை ஏற்றி வைத்தார். பின், அலங்கார கோலத்தில் வீற்றிருந்த ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு மஹா தீபாரதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், நகராட்சி தலைவர் அர்ச்சுனன், துணை தலைவர் குணசேகரன், அதிமுக நகர் செயலாளர் பெருமாள், பாஜக தேசிய குழு உறுப்பினர் முரளீதரன், காங்கிரஸ் நகர் தலைவர் பாரிராஜன், கோயில் சூப்பிரெண்டு கக்காரின், பேஷ்கார்கள் ராதா, அண்ணாதுரை, பக்தர்கள் பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதனைதொடர்ந்து கோயிலில் 12 நாள்கள் திருவிழா துவங்கி, தினசரி சுவாமி, அம்மன் வீதி உலா நடைபெறும்.