தங்க கேடயத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி வீதி உலா!
ராமேஸ்வரம்: சிவராத்திரி திருவிழாவின் 2ம் நாளை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து, சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க கேடயத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அக்னிதீர்த்த புனிதநீர் தெளிக்க ஆலோசனை: ராமேஸ்வரம் கோயில் அக்னிதீர்த்த புனித நீர் வீணாகாமல், பக்தர்களுக்கு தெளிக்கும் தொழில்நுட்பம் பற்றி என்.ஐ.டி.,இயக்குனர், மதுரை ஐகோர்ட் கிளையில் அறிக்கை தாக்கல் செய்தார்.கோவை வக்கீல் வெண்ணிலா ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலைச் சுற்றி கழிவுகள் தேங்கியுள்ளன. கழிவுகள் அக்னி தீர்த்த பகுதியில் கலக்கிறது. 22 இடங்களில் தீர்த்தமாட, அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். கோயிலின் புனிதத் தன்மையை பாதுகாக்க உத்தரவிட வேண்டும், என மனு தாக்கல் செய்தார்.நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி கொண்ட பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது.திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவன (என்.ஐ.டி.,) இயக்குனர் சுந்தர்ராஜன் அறிக்கை:பேராசிரியர்கள், மாணவர்கள் குழு தீர்த்தக் கிணறுகளை ஆய்வு செய்தது. கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து, கடல்நீர், கழிவுநீர் கலக்கிறது. மின் மோட்டார் மூலம், தீர்த்தத்தை வெளியேற்றினால், கிணற்றுக்குள் மேலும் கழிவுநீர் கலக்கும்.தீர்த்தத்தை ஆய்வகத்தில் பரிசோதித்ததில், வேதிப் பொருட்கள் மற்றும் கழிவுகள் கலப்பது உறுதியானது.தீர்த்தக்கிணறுகளின் ஊற்றில், குறைந்தளவு நீர் சுரக்கிறது. இதனால், குறைந்தளவு நீரை இறைக்க வேண்டும். மோட்டார் பம்ப் பயன்படுத்தக்கூடாது. கிணறுகளிலிருந்து, "அடி பம்ப் மூலம் நீரை வெளியேற்றும் முறையை பின்பற்ற வேண்டும். நீரை, மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் சேமித்து, அதிலிருந்து சிறு தொட்டிகளுக்கு கடத்த வேண்டும். அதிலிருந்து வெளியேறும் நீரை, குடை வடிவிலான தெளிப்பான் மூலம், ஒரே நேரத்தில் 5 பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு செய்யலாம். இதற்கு தானியங்கி (சென்சார்) கருவியை பயன்படுத்தலாம்.தீர்த்தமாடும் இடத்தில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும். தேங்கும் கழிவு நீரை, சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நகராட்சி கமிஷனர்,""திடக்கழிவுகளை அகற்ற, பிப்.,28 க்குள் டெண்டர் விடப்படும், என்றார். நீதிபதிகள்: கோயிலுக்குச் சம்பந்தமில்லாத வெளியாட்கள் (புரோக்கர்கள்), பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கின்றனர். இது பற்றி, ராமநாதபுரம் எஸ்.பி.,பிப்.,25 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.