இறைவன் அருளை பெற இப்படியும் ஒரு வழி!
இறை வழிபாட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையை கையாள்கின்றனர். வசதிபடைத்தவர்கள் கோயில்களுக்கு பணம் செலவு செய்து, காணிக்கை செலுத்துதல், நேர்த்திக்கடன் செலுத்துதல், கட்டடம் கட்டித்தருதல், அன்னதானம் என பல்வேறு செயல்கள் மூலம் இறை அருளை பெற முயற்சிக்கின்றனர். இறைவனின் ஆசியை பெற, அவர் வாழும் ஆலயத்தை, தூய்மைப்படுத்துவதே எளிய வழி என, ஆலய தூய்மை பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் பழநியிலுள்ள ஆன்மிக தொண்டர்கள் சிலர். பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் 15 ஆண்டுகளாக, ஆலய தூய்மைபணியில் ஆன்மிக தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆன்மிக தொண்டர்களின் ஒருங்கிணைப்பாளர் எஸ். ராஜா கூறியதாவது: பழநியைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினராக சேர்ந்து, ஆலயங்களில் உள்ள விளக்குகள், திருவாச்சி, அண்டா, குண்டா போன்றவற்றை சுத்தம் செய்து தருகிறோம். மேலும் இலவசமாக பூக்களும் கட்டி தருகிறோம். ராமேஸ்வரம், சிக்கல் சிங்காரவேலன், திருச்செந்தூர் போன்ற கோயில் விழாக்களில் பங்கேற்று, அங்கும் ஆலய தூய்மை செய்யும் பணியை செய்கிறோம். இதற்காக எவ்வித கட்டணமும் பெறுவது இல்லை. குழுவினருக்குள் வசூல் செய்து, எங்கள் பயணச்செலவு, இதர செலவுகளை மேற்கொள்கிறோம், என்றார். இவர்களை வாழ்த்த: 98655 50049.