கோயில் இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆராய்ச்சிப்பட்டி திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி திடலில், கோயில் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள், நேற்று அகற்றப்பட்டன. வீட்டை இடிக்க முயன்ற போது, ஒருவர் வீட்டிற்கு தீ வைத்தார். ஆராய்ச்சிப்பட்டி திரவுபதியம்மன் கோயில் பூக்குழி திடலில், இந்துசமய அறநிலையத்துறையின் நிலம் உள்ளது. கோயில் நிர்வாகத்தினர் வாய்மொழியாக உத்தரவாதம் அளித்ததாக கூறி, கடந்த பல ஆண்டுகளாக, இந்த இடத்தில் செல்லத்துரை, கணேசன் ஆகியோர் குடியிருந்து வந்தனர். தலா ஒரு சென்ட் இடத்தில், வீடு கட்டி உள்ளனர்; இதற்காக, ஆண்டுக்கு 1000 ரூபாய் வாடகை செலுத்தி வந்தனர். சுற்றி இருந்த, 15 சென்ட் நிலத்தில், "லேத் பட்டறை, பிளாஸ்டிக் கடை என, ஆக்கிரமித்திருந்தனர். கோயில் திருவிழா காலங்களில் பூக்குழி திடலில், நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் சிரமம் அடைந்தனர். இதையடுத்து கோயில் நிலத்திலிருந்து வெளியேறுமாறு, 2012 ல், அறநிலையத்துறையினர் உத்தரவிட்டனர். ஆனால், வெளியேறவில்லை. தற்போது, கோயில் விழா நடக்கிறது; இதையடுத்து நேற்று காலை, அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா பிரியதர்ஷினி தலைமையில், மடவார்வளாகம் கோயில் செயல் அலுவலர் அஜித் முன்னிலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. மண் அள்ளும் இயந்திரம் மூலம் வீடு, கட்டடங்களை இடிக்க முயன்றனர். இதனால் செல்லத்துரை, தனது குடும்பத்தினருடன், வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு, துணிகளை போட்டு தீ வைத்தார். மேலும், "தற்கொலை செய்து கொள்வோம் என, மிரட்டினார். தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து, செல்லத்துரை குடும்பத்தினரை, வீட்டிலிருந்து வெளியேற்றினர். அப்போது செல்லத்துரை, தனது கையை கத்தியால் கீறிக்கொண்டார். பின், போலீசார் குவிக்கப்பட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், "பிப்., 26 க்குள் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்கிறோம், என, செல்லத்துரை உறுதி அளித்தார். இதற்குப்பின், அவரது வீட்டை மட்டும் இடிக்காமல், மற்ற ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.