இந்து கோவில்களின் வரவு -செலவு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!
விழுப்புரம்: கோவில்களின் வரவு-செலவு குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்தார். விழுப்புரம் ஆஞ்சநேயா திருமண மண்படத்தில் இந்து முன்னணி சார்பில் சமுதாய சமர்ப்பன தினம் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட, இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராமகோபாலன் அளித்த பேட்டி: தமிழகத்திலுள்ள பல கோவில்களில் ஆறுகால பூஜைகள் நடத்த போதிய வருமானம் இல்லை. இந்து கோவில்களின் வரவு- செலவு குறித்து, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஆக்கிரமிப்பு செய்துள்ள இந்து கோவில்களின் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், சரியான பராமரிப்பின்றி உள்ளன. எனவே ஓய்வு பெற்ற நீதிபதிகள், மடாதிபதிகள் மற்றும் சமுதாயத் தலைவர்களை ஒருங்கிணைத்து, வாரியத்தின் கட்டுப்பாட்டில் கோவில்களை கொண்டு வரவேண்டும். இந்துக்கள் மத்தியில் ஜாதி பிரிவு இருக்கக் கூடாது. சில அரசியல் கட்சித் தலைவர்கள் ஜாதியை வைத்து அரசியல் செய்கின்றனர். இதை இந்து முன்னணி ஏற்காது. வரும் லோக்சபா தேர்தலில் இந்துக்கள் மீது அக்கறை கொண்டுள்ளவர்களுக்கு பொது மக்கள் ஓட்டளிக்க வேண்டும். நாங்கள் யாருக்கு ஆதரவு என்பதை, தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பின் தெரிவிப்போம். இவ்வாறு ராமகோபாலன் தெரிவித்தார்.