சிதம்பரத்தில் பன்னிரு திருமுறை வெள்ளி விழா மாநாடு!
சிதம்பரம் : சிதம்பரத்தில் நடந்த பன்னிரு திருமுறை வெள்ளி விழா மாநாட்டில் ஏராளமான சிவனடியார்கள் பன்னிரு திருமுறை நூல்களை தலையில் ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். விருத்தாசலம் சிவனடியார்கள் அமைப்பு சார்பில் 25ம் ஆண்டு பன்னிரு திருமுறை வெள்ளி விழா மாநாடு சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது. பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்கும் சிவனடியார்களின் திருமுறை மாநாடு மூன்று நாட்கள் நடக்கிறது. காலை ரிஷப விடைக்கொடியை மூ.மு.க., தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் ஏற்றி மாநாட்டை துவக்கி வைத்தார். இதனைதொடர்ந்து மாநாட்டு அரங்கில் இருந்து பன்னிரு திருமுறை நூல்களை தலையில் சுமந்து சிவனடியார்களின் வீதி வலம் வரும் சிவலோகக் காட்சி ஊர்வலம் நடந்தது. திருமுறை மாநாட்டிற்கு உமாபதி தீட்சிதர் தலைமை தாங்கினார். ராமலிங்கம் மனைவி கமலாம்பாள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். முத்துக்குமரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் "விழாவின் விழுப்பொருள் தலைப்பில் குடியாத்தம் பக்தவச்சலம் சொற்பொழிவாற்றினார். சிவப்பெருந் தொண்டர்களுக்கு பாராட்டு, 64 சிவ தொண்டர்களுக்கு 5,000 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் நாயன்மார்கள் நினைவு விருது வழங்கப்பட்டது. 119 சிவனடியார்கள் "சிவனருட் செல்வர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து ஆய்வரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சிவனடியார்கள், நகர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இரண்டாம் நாள் 5 எழுத்து பெருவேள்வி, திருமுறை நாதருக்கு கோடி அர்ச்சனை நிகழ்ச்சிகள். 3ம் நாள் ஆன்மிக கருத்துரை, சொற்பொழிவுகள், திருப்பள்ளி எழுச்சி நடக்கிறது.