புதுகையில் 66 கோவில்களில் சிறப்பு பூஜை!
புதுக்கோட்டை: தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 66 திருக்கோவில்களில் நேற்று அ.தி.மு.க., சார்பில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. அ.தி.மு.க., மாவட்டச் செயலாளரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க., சார்பில், 66 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக புதுக்கோட்டை திலகர் திடலில் தனி அரங்கம் அமைக்கப்பட்டு கடந்த 8ம் தேதி முதல் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என்பதற்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் அதிக ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பிறந்த நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 6,600 பெண்கள் பங்கேற்ற பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நகரையே ஸ்தம்பிக்க வைத்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்கள் அனைவருக்கும் பச்சைநிற சேலைகள், பால் குடங்கள் வழங்கப்பட்டது. ஊர்வலத்தை தொடர்ந்து திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள் மற்றும் அ.தி.மு.க.,வினருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், அமைச்சர் சுப்பிரமணியன், எம்.எல்.ஏ., க்கள் கார்த்திக் தொண்டைமான், வைரமுத்து, கு.ப.கிருஷ்ணன், ராஜநாயகம், மாவட்ட பஞ்., தலைவர் ராமையா, நகர்மன்ற தலைவர்(பொ) அப்துல் ரகுமான், நகரச் செயலாளர் பாஸ்கர், தொழிலதிபர்கள் எஸ்.வி.எஸ். வெங்கடாசலம், ஜெயக்குமார், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் ராஜசேகரன், கவுன்சிலர்கள் தியாகராஜன், கண்ணன், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். முதல்வர் பிறந்த நாளான நேற்று(24ம் தேதி) புதுக்கோட்டை வேதநாயகி சமேத சாந்தநாத சுவாமி கோவில், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில், பிரகதாம்பாள் சமேத கோகர்ணேஸ்வரர் கோவில், தண்டபாணி கோவில், திருவேங்கைவாசல் வியாகபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட 66 கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் நடந்தன. மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைக் கழகங்களிலும் கல்வெட்டுடன் கூடிய கொடி கம்பத்தில் கட்சிக்கொடி ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. முதியோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. மாவட்ட விவசாய அணி சார்பில், மா, பலா, சப்போட்டா, கொய்யா, தென்னை உள்ளிட்ட 66 வகையான 66 ஆயிரத்து 666 காய்கனி மரக்கன்றுகள் மாவட்டம் முழுவதும் நடவு செய்யப்பட்டது. மரக்கன்றுகளை நன்கு பராமரித்து பலனை அறுவடை செய்பவர்களுக்கு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய மக்கள், கட்சி நிர்வாகிகள், அணி பொறுப்பாளர்கள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நன்றி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.