உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவாங்க புராணம்!

தேவாங்க புராணம்!

தேவாங்க வம்சத்தில் அறநெறி வழுவாமல் ஆட்சி செய்த மன்னர்களும், சைவ சமயத்தையே உயிர்மூச்சாகக்கொண்டு நெறி பிறழாமல் வாழ்ந்த சான்றோர்களும் பலர் இருந்திருக்கின்றனர். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் ஏகோராமன் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட விருபாட்சன் ஆவார். தன் தந்தை தேவதாசரைப் போலவே சைவத்தைப் பரப்புவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டு செயல்பட்டார். அதற்காக மடங்கள் பலவற்றை நிறுவி, அவற்றை நிர்வகிக்க மடாதிபதிகளை நியமித்தார். சமயத்துறையை சிறப்புடன் நிர்வகிப்பதற்கு குரு பீடங்கள், சிம்மாசனங்கள் போன்ற அமைப்புகளையும் ஏற்படுத்தினார். குல ஒழுக்கங்களையும் சமூகக் கட்டுப்பாடுகளையும் காக்க சிம்மாசனாதிபதிகளும்; ஆசாரசீலம், தெய்வ வழிபாடு போன்றவற்றை நெறிப்படுத்த பீடாதிபதிகளும் நியமிக்கப்பட்டிருந்தனர். தேவைப்படும்போது இவர்கள் ஆட்சியிலும் பங்குகொண்டு மன்னனுக்கு அறிவுரை கூறுபவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.

விருபாட்சனுக்குப்பின் அவனுடைய மகன் உருத்திரன் சைவ சமயக் கொள்கைகளை நன்கு கற்றறிந்து, சைவ ஆகமங்கள் கூறும் நெறிப்படியே வாழ்க்கை நடத்தினான். உருத்திரனின் மகன் காலசேனன். இவன் கலிங்க மன்னனின் மகளைத் திருமணம் செய்துகொண்டான். நெடுநாட்களாக அவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டவில்லை. காலசேனன் புத்திர பாக்கியம் வேண்டி, சிவபெருமானை நோக்கித் தவம் மேற்கொண்டான். அவனுடைய தவத்திற்கிரங்கிய சிவபெருமான் புத்திரப்பேறுகிட்ட வரமருளினார். சிவபெருமானின் அருள்பெற்ற காலசேனன் பல பெண்களை மணந்து புத்திரர்கள் பலரைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தினான். தேவலர் காலம் முதல் காலசேன மன்னன் காலம் வரை பல்கிப் பெருகிய இம்மரபினர் தேவலர் சமூகத்தினர் என்று அழைக்கப்பட்டனர். தேவர்களின் அங்கங்களை அழகுசெய்வதற்கு ஆடைகள் நெய்தளித்ததால் அவர்கள் தேவாங்கர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். தேவாங்க வம்சத்தின் முதல் மகனான தேவலர் சிவபெருமானின் இதயத்திலிருந்து தோன்றியதால் அவரது வம்சத்தினர் தேவாங்கம் (தேவ+அங்கம்) என்றும் பொருள்பட தேவாங்கர் என்று அழைக்கப்படுவதாகவும் ஒரு கருத்து கூறப்படுகிறது.

தேவதாங்க குலத்தினர் தங்கள் குலத்தொழிலாகிய நெசவுத்தொழிலையே ஆதாரமாகக் கொண்டு இமயம் முதல் குமரி வரை பரவி வாழ்ந்தனர். நாட்டின் பல பகுதிகளிலும் வாழ்ந்து வரும் தேவாங்க குல மக்கள், தாங்கள் வாழும் இடங்களின் சார்பினால் வெவ்வேறு மொழிகளைப் பேசி வந்தாலும், அவர்களுடைய தொழில், குல ஆச்சாரம், சமய ஆச்சாரம் ஆகியவை ஒன்றாகவே உள்ளன. இந்த ஒருமைப்பாட்டிற்க்குக் காரணமாக இருப்பது இவர்களது குலதெய்வமான சவுடாம்பிகையே என்பது இவர்களது நம்பிக்கை. தேவாங்ககுல மக்கள் வாழும் இடங்களிளெல்லாம் அவர்களுடைய குலதெய்வமான சவுடாம்பிகை அம்மன் கோவில் இருக்கும். ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, வங்கதேசம் போன்ற நாட்டின் பலபகுதிகளிலும் இவர்கள் வாழ்ந்து வருவதால், அப்பகுதிகளில் சவுடாம்பிகை அம்மனுக்குக் கோவில்கள் உள்ளன.

தேவலர் காலம் முதல் காலசேனன் காலம் வரை ஆட்சிபுரிந்த தேவாங்க குலமன்னர்கள் அனைவரும் சைவ சமயத்தை வளர்ப்பதையே தங்கள் கடமையாகக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், தங்கள் வம்சத்திற்குப் பெருமை சேர்க்கும் நெசவுத் தொழிலையும் நாடெங்கும் விரிவுபடுத்தினர். காலசேனனுக்குப்பின் அவனுடைய வம்சாவளியினர் பலரும் நல்லாட்சி செய்ததோடு சைவ சமயத்தையும், தங்கள் குலத்தொழிலையும் காத்து வளர்த்து வந்தனர். காலசேனனின் மகன்கள் மனு முதலான முனிவர்களிடம் குருகுலவாசம் செய்து கலைகளையும், சாஸ்திரங்களையும் கற்றனர். அவர்கள் எந்தெந்த மகரிஷிகளிடம் குருகுலவாசம் செய்தனரோ அந்ததந்த மகரிஷிகளின்  பெயர்களையே தங்கள் கோத்திரங்களாகக் கொண்டனர். அந்த கோத்திரங்களின் அடிப்படையிலேயே அவர்கள்  திருமண உறவுமுறைகளைத் தீர்மானித்துக் கொண்டார்கள், இவ்வாறு தேவாங்க சமூகத்தினர் 700 கோத்திரங்களைச் சார்ந்திருந்தனர்.

தேவாங்க குலமக்களின் பரிபாலனத்திற்கென பரம்பரை உரிமைகள் வழங்கப்பட்ட பட்டக்காரன், நாட்டு எஜமானன், செட்டிமைக்காரன் என்ற வெவ்வேறு பிரிவினர், தங்களுக்கென நிர்ணயிக்கப்பட்டிருந்த வழிமுறைகளின்படி செயல்பட்டு நிர்வகித்து வந்தனர். தேவாங்க சமுதாயத்தினருக்கென புரோகிதர்களும், குல உபசாரங்களைச் செய்வதற்கென சேஷ ராஜு என்ற பட்டப்பெயருடன் சிலரும் இருந்ததாகத் தெரிகிறது. கோவில் பணிகள் சிலவற்றைச் செய்வதற்காக முற்காலத்தில் மாணிக்கம் பங்காரு என்று அழைக்கப்பட்ட பெண்கள் அமைப்புகள் இருந்ததாகவும்; நாளடைவில் இந்த நடைமுறை கைவிடப்பட்டுவிட்டதாகவும் அறியப்படுகிறது. காலப்போக்கில் உண்டான சமூக மாற்றங்களினால், ஏகோராமனால் ஏற்படுத்தப்பட்ட நிர்வாக அமைப்புகளான சிம்மாசனங்களும், குரு பீடங்களும் எண்ணிக்கையில் குறைந்து சிம்மாசனங்கள் நான்கும், பீடங்கள் ஐந்துமாய் குறுகின. உத்திரப்பிரதேசத்தில் ஷகர் என்ற இடத்திலுள்ள ரத்தின சிம்மாசனம்; ஆந்திரப்பிரதேசம், கிருஷ்ணா மாவட்டம், முதனூர் என்ற ஊரிலுள்ள வீர சிம்மாசனம்; அனந்தப்பூர் மாவட்டம் பெனுகொண்டாவிலுள்ள வெரிகோட்டி சிம்மாசனம்; மற்றும் தமிழ்நாட்டில் வட ஆற்காடு மாவட்டம், படவேடு என்ற இடத்திலுள்ள இராய சிம்மாசனம் ஆகிய சிம்மாசனங்கள் சமீபகாலம் வரை செயல்பாட்டிலிருந்து, தற்போது அவையும் மறைந்து போனதாகக் கூறப்படுகிறது.

காசி, ஸ்ரீசைலம், ஹேமகூடம், சோணாசலம், சம்பு சைலம் ஆகிய இடங்களில் இருந்ததாகக் கூறப்படும் ஐந்து குரு பீடங்களும் நாளடைவில் செயல்பாடிழந்து மறைந்துபோயின. தேவலர் தோற்றம் முதல் அவரது பரம்பரையினரும் தொடர்ந்து சைவநெறிகளைப் பரப்புவதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். என்பதைத் தேவாங்க புராணம் மூலம் அறிய முடிகிறது. பண்டைத் தமிழர்களின் பழம்பெரும் சமயம் சைவ சமயம். இச்சமயத்தின் உட்பொருளை உணர்த்தும் கூறுகளில் ஒன்று-சிவனிலிருந்து சக்தி வடிவெடுக்கும் அம்பிகையின் அவதாரங்களாகும். அவற்றிலொன்றான சவுடேஸ்வரிதேவியின் புகழையும் தேவாங்கபுராணம் பாடுகிறது. சிவபெருமானின் இதயத்திலிருந்து தோன்றிய தேவலர்-தேவலர், கமலாட்சன், புட்பதத்தன், வேதாளம், வரருசி, தேவசாலி, தேவதாசர் என ஏழு பிறவிகள் எடுத்து முடித்து, எடுத்த  எல்லா பிறவிகளிலும் சைவத்தைப் பரப்புவதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்துமுடித்து, மீண்டும் மறுபிறவி எடுக்காத முக்திப் பேற்றை அடைந்தார். இறைவனால் தோற்றுவிக்கப்பெற்ற உயிர் மீண்டும் அவனைச் சேரும் நிலையை உணர்த்துவதே தேவலர் அம்சம்.

கால ஓட்டத்தில் மக்களிடையே நல்லுணர்வு சிதைந்து ஒழுக்கம் குன்றும்போது, அவர்களைத் திருத்தவும் நல்வழிப்படுத்தவும் அவ்வப்போது மகான்கள் தோன்றினர். அவர்கள் இயற்றிய நூல்கள் அதற்கு உறுதுணையாக இருந்திருக்கின்றன. இதிகாசங்களிலும், புராணங்களிலும் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் மக்களின் அறநெறி சார்ந்த வாழ்க்கைக்கு இன்றும் ஆதாரமாகத் திகழ்கின்றன. அவை நம்மைச் செம்மைப்படுத்தி, நாம் முறையான வாழ்க்கையை மேற்கொள்ள வழிவகுக்கின்றன. மும்மலமும் அறுத்து இறையருள் பெறுவதே பிறவிப்பயன் என்பதையும், சைவ நெறியே சிறந்த வாழ்க்கை நெறி என்பதையும் தேவாங்க புராணம் உணர்த்துகிறது. பஞ்ச பூதங்களின் கூட்டுச் சேர்க்கையான மனித வர்க்கத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுபவன் தெய்வமாகிறான் என்ற நீதியையும் இப்புராணம் போதிக்கிறது. தேவாங்க வம்சத்தின் வரலாறாகவும். அவர்களது குல ஆவணமாகவும் போற்றப்படும். தேவாங்க புராணம் சைவ சமய ஆவணமாகவும் திகழ்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !