கருவறையில் சிவலிங்கம் மீது விழுந்த சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம்!
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் உள்ள, சங்கிலி மாடசாமி கோயிலில், கருவறையில் உள்ள, சிவலிங்கம் மீது ஆண்டிற்கு மூன்று நாட்கள் விழும் சூரிய ஒளி, நேற்று விழுந்ததால், பக்தர்கள் பரவசமடைந்தனர். வத்திராயிருப்பு சேனியர்குடி தெரு பகுதியில், ஒரு சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட சங்கிலிமாடசாமி கோயில் உள்ளது. ஆனால், இங்கு பிரதான சன்னதியில் மூலவராக சொக்கநாதரும், மீனாட்சியம்மனும் அருள்பாலிக்கின்றனர். மற்ற பரிவார தெய்வங்கள் வரிசையில் சங்கிலிமாடசாமி கருப்பசாமி, லாடசன்யாசி, சின்னத்தம்பி, 21 மாடசாமிகள் அருள்பாலிக்கின்றனர். இங்கு கோயில் வாசல் வழியே வழக்கமாக வந்து செல்லும் சூரிய ஒளி, முன் மண்டபத்தோடு நின்று விடும். ஆண்டில் மூன்று நாட்கள் மட்டும், அதாவது, பிப்., 26,27,28 தேதிகளில், வாசலுக்கு மேல், 20 அடி உயரத்தில் அமைந்துள்ள கோபுர ஆர்ச் சிற்பங்களுக்கு நடுவே தோன்றுகிறது. அங்கிருந்து சூரிய ஒளி நேராக 40 அடி தூரம் சென்று, சொக்கநாதர் கர்ப்ப கிரஹத்தில் நுழைந்து சுவாமி மீது 3 நிமிடம் விழுகிறது. அதன் பிறகு வந்த வழியே கீழே இறங்கி 10 நிமிடத்தில் முன் மண்டபத்திற்கு சென்று மறைந்து விடுகிறது. இந்த ஆண்டு இந்த அதிசய நிகழ்வை கடந்த 3 நாட்களாக அப்பகுதி பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இதுகுறித்து அக்கோயில் பூஜாரி சாமிமலை கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில மாதம் இதே தேதியில் சுவாமி மீது வந்து விழும் ஒளி, இந்த ஆண்டு ஒருநாள் முன்னதாக தோன்றியுள்ளது. அதே சமயம் தமிழ் தேதி, நட்சத்திரம் பொருந்தி வரவில்லை. ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நட்சத்திரத்தில் வருகிறது, என்றார்.