கூடலழகர் தெப்பக்குளத்தில் எப்போதும் தண்ணீர்: ஐகோர்ட்டில் உறுதி!
மதுரை:மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில், நிரந்தரமாக தண்ணீர் தேக்க, 75 லட்சம் ரூபாயில் திட்டமிட்டுள்ளதாக கோயில் நிர்வாக அலுவலர், ஐகோர்ட் கிளையில் அறிக்கை தாக்கல் செய்தார். மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக, டவுன்ஹால் ரோடு பகுதியில் தெப்பக்குளம் உள்ளது. இங்கு கழிவு நீர் தேங்கி, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது என, ஐகோர்ட் கிளை பதிவாளர் (நீதித்துறை) 2011 ல் நீதிபதிகளிடம் (பெஞ்ச்) புகார் செய்தார். இதை தானாக முன்வந்து, நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றனர்.ஏற்கனவே நீதிபதிகள்,மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளம் போல், கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில், நிரந்தரமாக தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி கொண்ட பெஞ்ச் முன், மனு நேற்று விசாரணைக்கு வந்தது.கோயில் நிர்வாக அலுவலர் பதில் மனு:மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளத்தில், நிரந்தரமாக தண்ணீர் தேக்க, ஐ.ஐ.டி.,யின் பரிந்துரை பெறப்பட்டது. அதுபோல் கூடலழகர் பெருமாள் தெப்பக்குளத்தில், தண்ணீர் தேக்க 75 லட்சம் ரூபாயில் திட்டமிடப்பட்டுள்ளது. தெப்பக்குளத்தின் பக்கவாட்டு சுவர்கள் பலப்படுத்தப்படும். மைய கல் மண்டபம் புதுப்பிக்கப்படும். சுற்றுலாத்துறை நிதி அல்லது நன்கொடையாளர்கள் மூலம் மேற்கொள்வதா என முடிவு செய்யப்படும். திட்ட அறிக்கை, அறநிலையத்துறை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள், கோயில் நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கை பற்றி, ஏப்.,முதல்வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்றனர்.