திருமலை ஆனந்த நிலைய கவசத்திற்காக பெறப்பட்ட தங்கத்தின் நிலை என்ன?!
திருப்பதி: திருமலை கோவிலில், ஏழுமலையான் சன்னதியைச் சுற்றிய உள் பிரகாரமான, ஆனந்த நிலையத்திற்கு, தங்க கவசம் செய்ய, பெறப்பட்ட தங்கத்தின் நிலை என்ன என்ற கேள்வி, பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவராக, ஆதிகேசவலு நாயுடு இருந்தபோது, ஏழுமலையான் குடியிருக்கும், ஆனந்த நிலையம் முழுவதும், தங்க கவசம் அணிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக, "ஆனந்த நிலையம் அனந்த சொர்ணமயம் என்ற திட்டம், 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு, அனில் அம்பானி, விஜய் மல்லையா உட்பட, தொழிலதிபர்கள், 127 பேர், 132 கிலோ தங்கம் மற்றும், 92 கோடி ரூபாயை, நன்கொடையாக வழங்கினர். அந்த தங்கத்தை, மொத்தமுள்ள, 16 கதவுகளில், ஆறு கதவுகளுக்கு கவசமாக அணிவித்தனர். 2011ல், இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. இந்த விவகாரம், சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. அங்கும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று, பெறப்பட்ட தங்கம் மற்றும் பணத்தை, உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.ஆனால், இதுவரை, நன்கொடையாக அளிக்கப்பட்ட தங்கம் மற்றும் பணத்தை, யாரும் திரும்ப பெறவில்லை. இதனால், 92 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும், 132 கிலோ தங்கம், கிடப்பில் போடப்பட்டுள்ளது.