புலிமடு ருத்ர அபிஷேகத்திற்கு சிவகங்கை புனித நீர் ஊர்வலம்!
சிதம்பரம்: புலிமடு மத்யந்தினீஸ்வரர் கோவிலில் ருத்ர அபிஷேகத்திற்கு நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாக சென்றனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு சிதம்பரம் அடுத்த விபீஷ்ணபுரம் (புலிமடு) மங்களநாயகி சமேத மத்யந்தினீஸ்வரர் கோவிலில் ருத்ர அபிஷேகம் மற்றும் தீர்த்த அபிஷேகம் நடைப்பெற்று ருத்ர யாகம் நடக்கிறது. இதனையொட்டி விபீஷ்ணபுரம் பகுதி மக்கள் சுவாமி அபிஷேகத்திற்கு நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தில் புனித நீர் எடுத்து செல்லும் நிகழ்ச்சி சிதம்பரத்தில் நேற்று நடந்தது. பக்தர்கள் சிவகங்கை புனித நீரை கீழக்கு கோபுரம் வாயில் இருந்து 200க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக புலிமடு கோவிலுக்கு எடுத்து சென்றனர். புனித நீருக்கு கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நாளை (27ம் தேதி) காலை மகா சிவராத்திரியை முன்னிட்டு மங்களநாயகி சமேத மத்யந்தினீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதனைதொடர்ந்து இரவு நான்கு கால சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விபீஷ்ணபுரம் பகுதி பொதுமக்கள் மற்றும் வியாக்ரபாதர் வழிப்பாட்டுக் குழுவினர் செய்து வருகின்றனர்.