மகாசிவராத்திரி பாரி வேட்டை வனத்துறையினர் கண்காணிப்பு!
பழநி: மகாசிவராத்திரியை முன்னிட்டு பாரிவேட்டை நடத்துவதை தடுக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். மாசிமாதம் வரும் மகா சிவராத்திரி அன்று, விருதுநகர், திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், குலதெய்வ வழிபாடு நடக்கிறது. இதில், கிராம சமுதாய வாரியாக முந்தைய காலங்களில் கடைபிடிக்கப்பட்ட பழக்கமான, காவல் தெய்வத்திற்கு பாரிவேட்டை கொடுத்தல் நிகழ்ச்சி, சிவராத்திரியன்று அல்லது மறுநாள், மூன்றாம் நாள் நடப்பதுவழக்கம். மறுநாள் அவற்றை பகிர்ந்து உண்பர்.பாரிவேட்டையின் போது, மான், முயல், நரி போன்ற வனவிலங்குகள், வேட்டையாட வாய்ப்புள்ளதால், வனப்பகுதியை ஒட்டியுள்ள அனைத்து மலையடிவாரங்கள், கிராமங்களிலும், பாரிவேட்டையை கண்காணிக்கவும், வன உயிரினங்கள் வேட்டையை தடுக்கவும், வனத்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பழநி வனத்துறை ரேஞ்சர் கணேசன் கூறியதாவது: கிராமப்புறங்களில், பாரிவேட்டைக்காக, வேட்டை நாய்கள் உதவியுடன், வனவிலங்குகளை வேட்டையாடுவதை தடுப்பதற்காக, முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரோந்துபணியை மூன்றுநாட்கள் தீவிரப்படுத்தியுள்ளோம். மீறி வேட்டையாடுபவர்கள் வனவிலங்குகள் சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கப்படுவர், என்றார்.