பிரஹன் நாட்டியாஞ்சலி இன்று துவக்கம்: பெரியகோவிலில் 600 கலைஞர் பங்கேற்பு
தஞ்சாவூர்: ""தஞ்சை பெரியகோவிலில், மஹா சிவராத்திரி முன்னிட்டு, 600 பிரபல, இளம் கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி விழா இன்று (27ம் தேதி) துவங்கி, மார்ச் 5ம் தேதி வரை ஏழு நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது, என, தஞ்சை பிரஹன் நாட்டியாஞ்சலி பவுண்டேஷன் நிர்வாகிகள் கூறினர். தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில், ஆண்டுதோறும் பிரஹன் நாட்டியாஞ்சலி பவுண்டேஷன் சார்பில், பிரபல கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி விழா நடத்தப்படும். அதன்படி, நடப்பாண்டு, விழா ஏற்பாடு குறித்து, பவுண்டேஷன் தலைவர் டாக்டர் வரதராஜன், செயலாளர் முத்துக்குமார் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில், நிர்வாகிகள் செல்வி, சுப்பிரமணியம், சசிகலா உள்பட பலர் பங்கேற்றனர். பவுண்டேஷன் தலைவர் டாக்டர் வரதராஜன், செயலாளர் முத்துக்குமார் கூறியதாவது: தஞ்சை பெரியகோவிலில் மஹாசிவராத்திரி முன்னிட்டு, 11வது ஆண்டாக பிரஹன் நாட்டியாஞ்சலி கலை விழா நடக்கிறது. இவ்விழா இன்று (27ம் தேதி) துவங்கி, மார்ச் 5ம் தேதி வரை ஏழு நாட்கள் வெகுவிமரிசையாக நடக்கிறது. தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எல்.ஐ.சி., நிறுவனம் உதவியுடன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.