மதுரை சிவாலயங்களில் சிவராத்திரி வழிபாடு!
மதுரையில் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரியையொட்டி நான்கு கால சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாசி மாதம் தேய்பிறை திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேரும் நாளே மகா சிவராத்திரியாக காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவனுக்குரிய விரதங்களில் இது முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் சிவனுக்கு கடுமையாக விரதமிருந்து சிவமந்திரங்கள் உச்சரித்து சிவனை வழிபாடு செய்வார்கள். மகா சிவராத்திரியான நேற்று மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிவனுக்கு பக்தர்கள் வழங்கிய பூஜைப்பொருள்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அத்துடன் மாலை 6 மணிமுதல் பரதநாட்டியம், திருமுறை, இன்னிசை உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அத்துடன் இம்மையில் நன்மை தருவார் திருக்கோயில், முக்தீஸ்வரர் கோயில், திருவாப்புடையார் கோயில், திருவாதவூர், ஆதி சொக்கநாதர், தென் திருவாலவாய், புட்டு சொக்கநாதர் ஆகிய சிவன்கோயில்களில் நேற்று நடைபெற்ற சிவராத்திரி பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.