தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!
இடையகோட்டை: வலையபட்டி மகாலட்சுமி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இடையகோட்டை அருகே உள்ள வலையபட்டியில் ராயர்குல குரும்பாகுல வம்சத்திற்கு பாத்தியப்பட்ட மகாலட்சுமி அம்மன் கோயில் உள் ளது. இங்கு ஆண்டு தோறும் மகாசிவாராத்திரி உற்சவவிழா கொண்டாடப்படும். விழாவை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுவர். நேற்று காலை குல குருக்கள் சுந்தரமூர்த்தி சாமிகள் புனிதநீர் தெளித்தார். சக்தி அழைத்து வந்து முதலில் பரம்பரையாளர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 20 க்கும் மேற்பட்ட பக்தர்களின் தலையில் பூஜாரி பூஜப்பன் தேங்காய்களை உடைத்தார். இதன் தொடர்ச்சியாக இன்று குடிபாடுகள் பொங்கல் நடக்கிறது. மாலையில் அம்மன் இடையகோட்டை சென்று மஞ்சள் நீராடி அரண்மனையில் பரம்பரையாளர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.