பரமக்குடியில் அனைத்து கோயில்களிலும் மகாசிவராத்திரி விழா!
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள அனைத்து கோயில்களிலும், மகா சிவராத்திரி விழா நேற்று முன்தினம் இரவு தொடங்கி, விடிய, விடிய நடந்தது. சுந்தரராஜப் பெருமாள் கோயில் சந்நதியில் அருள்பாலிக்கும் காவல் தெய்வம் கருப்பண்ண சாமிக்கு, மாலை 5 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து சந்தனம், பால்குடம், இளநீர் காவடிகள் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். பின்னர் இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, கருப்பண்ண சாமி ராஜாங்க கோலத்தில் காட்சியளித்தார். காக்காத்தோப்பில் அருள்பாலிக்கும் பதினெட்டாம் படி கருப்பண்ண சாமிக்கு அபிஷேகம் நடந்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். ஈஸ்வரன் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர், எமமேஸ்வரம் எமனேஸ்வரமுடையார், நயினார்கோவில் நாகநாதசுவாமி திருக்கோயில்களில் மாலை 6 மணி முதல் தொடர்ந்து நான்கு கால பூஜை, அபிஷேகம் நடந்தது. அங்காளபரமேஸ்வரி அம்மன், வாணி கருப்பண்ணசாமி, குருநாதன் கோயில்களில் நடந்த அபிஷேகத்திலும் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பரமக்குடி தேவர் மகாலில், கோவை ஈஷா யோகா மையம் சார்பில் நடந்த மகா சிவராத்திரி விழாவில், வெள்ளியங்கிரியில் நடந்த தியானம், பஜனைகளை மெகா திரையில் கண்டு ஏராளமானோர் அருளாசி பெற்றனர். ஏற்பாடுகளை ஈஷா யோகா மையத்தினர் செய்திருந்தனர்.