பெண்களின் சபரிமலை.. மண்டைக்காட்டில் மாசி கொடைவிழா தொடக்கம்!
நாகர்கோவில்: பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். கேரளாவை சேர்ந்த பெண்கள் விரதமிருந்து இருமுடி கட்டு ஏந்தி இங்கு வந்து கடலில் குளித்து அம்மனை வழிபடுவதால் இது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு நடைபெறும் முக்கிய திருவிழா மாசிக்கொடை விழா. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலில் பூஜிக்கப்பட்ட கொடியை பூஜாரிகள் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கொடி மரத்தில் சட்டநாதன்குருக்கள் கொடியேற்றினார். அப்போது ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறந்தது. தொடர்ந்து கொடிமரத்துக்கு தீபாராதனை நடைபெற்றது. விழா தொடர்ந்து தினமும் பல்வேறு பூஜைகள் மற்றும் தேவி எழுந்தருளல் நிகழ்ச்சியுடன் நடைபெறுகிறது. ஏழாம் தேதி ஆறாம் நாள் விழாவில் நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்ற மகாபூஜை நடைபெறுகிறது. பத்தாம் தேதி ஒன்பதாம் நாள் விழாவில் இரவு 9.30 மணிக்கு சக்கரதீவட்டி ஊர்வலத்துடன் தேவி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 11-ம் தேதி நிறைவு நாள் விழாவில் நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்குபூஜை நடைபெறுகிறது. ஒன்பது பானைகளில் உணவு எடுக்கப்பட்டு வந்து அம்மனுக்கு படைத்து தீபாராதனை நடைபெறும் போது திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும். விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.