பாதயாத்திரை பக்தர்களுக்கு தங்கும் மடம் அமைக்க கோரிக்கை
மடத்துக்குளம் : பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் இளைப்பாற மடத்துக்குளம் பகுதியில் தங்கும் மடம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழநிமலைமுருகன் கோவிலுக்கு பல மாநில பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இதில் பலர் பாதயாத்திரையாக வருவது வழக்கம். பல ஊர்களில் இருந்து நடந்து வரும் பக்தர்கள் பழநிக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மடத்துக்குளம் பகுதியை கடந்து செல்கின்றனர். இந்த பகுதிக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு பொது இடங்கள் இல்லை. இதனால், மரநிழல், ரோடு ஓரங்கள், வீட்டு வாசல்களில் தங்கி இளைப்பாறும் நிலை உள்ளது. இது போல் தங்குவதால் கழிப்பிடத்துக்கும், குளிப்பதற்கும் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. பலர் அவதிப்படும் நிலையும் உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதற்குத்தீர்வாக முக்கிய இடமாக உள்ள மடத்துக்குளத்தில் பக்தர்கள் தங்கி இளைப்பாற தங்கும் மடம் ஒன்றை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பக்தர்கள் கூறுகையில், பலர் உதவி செய்து, பொது தங்கும் மடம் அமைத்தால் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும், உடுமலை- கொமரலிங்கம் வழியாக செல்லும் பக்தர்களுக்கு, கொமரலிங்கம் பஸ்ஸ்டாப்புக்கு அருகில் தேவஸ்தானத்தினர் சார்பாக இது போல் மடம் உள்ளது. இதை விட மடத்துக்குளம் வழித்தடத்தை பல மடங்கு பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் மடத்துக்குளம் பகுதியில் ஒரு தங்கும் மடம் அமைக்க வேண்டும் என்றனர்.