நின்ற நாராயணப்பெருமாள் கோயில் கிழக்கு நுழைவு வாயில் திறப்பு!
சிவகாசி : திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயில் திவ்விய தேசங்களில், 45வது தேசமாகும். இக்கோயிலுக்கு 5.20 ஏக்கர் நிலம் உள்ளது. கோயில் நிலம் பெரும் பகுதி ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி உள்ளது. இக்கோயிலின் தெற்கு நுழைவு வாயிலை, பல ஆண்டுகளாக பக்தர்கள் பயன்படுத்தி வந்தனர். இதனால் கோயில் கிழக்கு பகுதி நுழைவு வாயில் பயன்பாடு இன்றி இருந்தது. இந்நிலையில், கிழக்கு நுழைவு வாயில் படிக்கட்டிற்கும், கோயில் அலுவலக சுவருக்கும் இடையே உள்ள காலி இடத்தை, திருத்தங்கல் நகராட்சி, அரசு புறம்போக்கு இடம் என கூறி, அங்கன்வாடி மையம் கட்டி வருகிறது. கோயில் இடத்தில் அங்கன்வாடி மையம் அமைக்க, கோயில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளது.இந்நிலையில், கோயிலின் தெற்கு நுழைவு வாயிலை மூடி, கிழக்கு நுழைவு வாயிலை திறந்து, பக்தர்கள் இதன்வழியாக வந்து செல்ல வசதி செய்துள்ளது கோயில் நிர்வாகம். கோயில் வாசலில் உள்ள காலி இடங்களை, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில், பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த, கிழக்கு நுழைவு வாயிலை, தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். கோயில் நிர்வாக அதிகாரி அஜித் கூறுகையில், ""கோயிலின் பிரதான நுழைவு வாயில் கிழக்கு வாயில்தான். ஆகம விதிப்படி, கோயிலின் பிரதான நுழைவு வாயில், கிழக்கு பகுதியில் இருப்பது ஊருக்கும், கோயிலுக்கும் நல்லது. இதன் அடிப்படையிலும் பக்தர்கள் நீண்டகால கோரிக்கையை ஏற்று, கிழக்கு நுழைவு வாயில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம், என்றார்.