மூலவர் - பக்தர்கள் இடைவெளி கோவில் நிர்வாகம் குறைக்குமா?
ADDED :4289 days ago
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மூலவருக்கும் பக்தர்களுக்கும் உள்ள இடைவெளியைகுறைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கிருத்திகை மற்றும் விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மூலவரை 10 அடி இடைவெளியில் அருகில் இருந்து பக்தர்கள் தரிசிக்க, 10 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு தரிசன முறை அமலில் இருந்தது. கடந்த ஜனவரி 13ம் தேதி, சிறப்பு தரிசனத்தில் சென்ற மூதாட்டி ஒருவர், பக்தி பரவசத்தில், கந்தனை தொட்டு வணங்கினார். இதையடுத்து, கந்தனை தரிசிக்கும் இடைவெளியை 30 அடியாக அதிகரிக்க கோயில் நிர்வாகம் முடிவெடுத்தது. ஆனால் இந்த இடைவெளியை குறைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.