உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் தேர் திருவிழா: பக்தர்கள் வடம் பிடித்தனர்!

மேல்மலையனூர் தேர் திருவிழா: பக்தர்கள் வடம் பிடித்தனர்!

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மாசி தேர்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மாசி பெருவிழா, பிப்ரவரி 27ம் தேதி மகா சிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

28ம் தேதி மயானக்கொள்ளையும், இம்மாதம் 3ம் தேதி தீமிதி விழாவும் நடந்தது. திருத்தேர் வடம் பிடித்தல் நேற்று மாலை நடந்தது. இக்கோவிலின் புராணத்தின் படி, பிரம்மகத்தி தோஷத்தினால் பித்துப்பிடித்து திரியும் சிவபெருமான் சிவராத்திரியன்று இரவு இங்குள்ள மயானத்தில் வந்து தங்குகிறார். மறுநாள் நடக்கும் மயானக் கொள்ளையின்போது பார்வதி தேவியின் அம்சமான அங்காளம்மன் ஆக்ரோஷமாக விஸ்வரூபம் எடுத்து பிரம்ம கபாலத்தை ஆட்கொள்கிறார். இதன் பிறகு சிவபெருமானுக்கு பிரம்மகத்தி தோஷம் நீங்கி தில்லையில் ஆனந்த தாண்டவம் ஆடுகிறார்.

மயானக்கொள்ளையின் போது விஸ்வரூபம் எடுக்கும் அங்காளம்மனை சாந்தப்படுத்த தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் சேர்ந்து தேரின் சக்கரமாகவும், அச்சாணியாகவும், சிம்மாசனமாகவும் இருந்து தேரில் அழைத்து வருகின்றனர். இந்த விழாவே ஆண்டுதோறும் மேல்மலையனுாரில் மாசி திரு விழாவாக நடத்துகின்றனர். கோவில் ஐதீகத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் புதிய மரங்களைக் கொண்டு தேர் வடிமைத்து விழா நடக்கும். தேரில் வரும் அம்மனை வணங்கும் போது அனைத்து தேவர்கள், ரிஷிகள், முனிவர்களின் ஆசியும் ஒரு சேர கிடைக்கும் என்பது நம்பிக்கை. நேற்று மாலை 4 மணிக்கு அலங்கரித்த அங்காளம்மனை தேரில் ஏற்றினர்.

மாலை 4.10க்கு மகா தீபாராதனையுடன் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி துவங்கியது. லட்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். தேர் பவனியின் போது பழங்கள், காய்கறிகள், உணவு பொருட்கள், தானியங்கள், நாணயங்களை பக்தர்கள் தேரின் மீது வீசி நேர்த்தி கடன்களைச் செலுத்தினர். அறங்காவலர் குழு தலைவர் சரவணன், அறங்காவலர்கள் ஏழுமலை, பெருமாள், காசி, சின்னத்தம்பி, வடிவேல், சேகர் கலந்து கொண்டனர். விழுப்புரம் எஸ்.பி., மனோகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !