நவஜோதிர்லிங்க யாத்திரை சுற்றுலா ரயில்: ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு!
சென்னை: தமிழகத்தில் இருந்து, நவ ஜோதிர்லிங்க யாத்திரைக்கு பக்தர்கள் சிறப்பு ரயிலில் செல்ல, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, ஐ.ஆர்.சி.டிசி., தென் மண்டல உதவி பொது மேலாளர் ரவீந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து நவ ஜோதிர்லிங்க யாத்திரைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். மகாகாலேஸ்வர், ஓம்காரேஸ்வர், சோம்நாத், பீம்சங்கர், திரையம்பகேஸ்வர், குருஷ்னேஷ்வர், அவுண்ட்நாக்நாத், பார்லி வைத்யநாத், மல்லிகார்ஜுனேஸ்வர் ஆகிய ஒன்பது இடங்களில் அமைந்துள்ள, சிவன் கோவில்களை தரிசிக்கலாம். சுற்றுலா பயணிகளுக்கான, சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு, தென் மாநில சைவ உணவு சமைக்க, தனி பெட்டி, தங்குமிட வசதி, ஆங்காங்கே சுற்றிப் பார்க்க, பஸ் வசதி செய்யப்படுகிறது. வரும், 16ம் தேதி துவங்கி, 14 நாட்கள் சுற்றுலாவாக இது அமைகிறது. மதுரையில் இருந்து புறப்படும் ரயில், ஈரோடு, சென்னை, விஜயவாடா வழியாக, சுற்றுலா பகுதிகளுக்கு செல்கிறது. இதுவரை, 350 பேர் வரை முன்பதிவு செய்துள்ளனர். சுற்றுலா செல்ல விரும்புவோர், 9962944015 என்ற மொபைல்போன் எண்ணில், தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.