சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா துவங்கியது!
மண்ணச்சநல்லூர்: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களின் நலனுக்காக அம்மன் மேற்கொள்ளும் பச்சைப்பட்டினி விரதம் என்னும் பூச்சொரிதல் விழா நேற்று துவங்கியது. அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆண்டுதோறும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு அம்மனை நாடி வருவது வழக்கம்.தன்னை நாடி வரும் பக்தர்களின் நலனுக்காகவும் தீவினைகள் அணுகாமல் இருப்பதற்காகவும், மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், சமயபுரம் மாரியம்மன் ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை துவங்கி பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை, 28 நாட்கள் பச்சை பட்டினி மேற்கொள்வது வழக்கம். இந்த நாட்களில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவு, நீர்மோர், பானகம், இளநீர் மட்டுமே அம்மனுக்கு படைப்பது வழக்கம். தங்கள் நலனுக்காக விரதம் மேற்கொள்ளும் அம்பாளின் விரதம் நிறைவேற பக்தர்கள் பூக்கள் தூவி வணங்கும் விழாவே பூச்சொரிதல் விழாவாக கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா நேற்று காலை அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கோவில் நிர்வாகம் சார்பில் காலை, ஒன்பது மணியளவில் கடைவீதியில் இருந்து யானை மீது பூக்கூடைகள் வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது.பத்து மணியளவில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூச்சொரிதல் விழா துவங்கியது. தொடர்ந்து வி.துறையூர், மாகாளிகுடி உள்ளிட்ட கிராம மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட பூக்களை தூவி பக்தர்கள் விடிய விடிய வழிபட்டனர்.