நாமக்கல் நரசிம்மர் திருத்தேர் பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
நாமக்கல்: நரசிம்மர் ஸ்வாமி கோவில் திருத்தேர் பெருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நாமக்கல் நகரில், பிரசித்தி பெற்ற நரசிம்மர் ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் திருத்தேர் பெருவிழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, நேற்று காலை, 9.30 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 10 மணிக்கு திருமஞ்சனம், ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. இரவு, அன்ன வாகனத்தில், ஸ்வாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதை தொடர்ந்து, இன்று (மார்ச், 11) முதல், 16ம் தேதி வரை, காலை, 10 மணிக்கு திருமஞ்சனம், இரவு, 7 மணிக்கு, சிம்மம், அனுமந்தம், கருடன், சேஷ, யானை வாகனத்தில் ஸ்வாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மார்ச், 16ம் தேதி மாலை, 6 மணிக்கு, திருமாங்கல்ய தாரணம் நடக்கிறது. திருக்கல்யாணத்தில், பக்தர்கள் இறைவனுக்கு மொய் சமர்ப்பிக்கின்றனர். தொடர்ந்து, மாங்கல்ய பொட்டு, பட்டு அங்கவஸ்திரம் அளித்தல், மணவறை மற்றும் மின் அலங்காரம் நடக்கிறது. மார்ச், 17ம் தேதி காலை, 10 மணிக்கு, திருமஞ்சனம், தீர்த்தவாரி பல்லக்கு புறப்பாடும், இரவு, 7 மணிக்கு குதிவர வாகனத்தில் திருவீதி உலா, திருவேடுபரி உற்சவம் நடக்கிறது. 18ம் தேதி திருத்தேர் பெருவிழா கோலாகலமாக நடக்கிறது. அன்று காலை, 7.35 மணிக்கு, கோட்டை நரசிம்மர் திருத்தேர் வடம் பிடித்தல், மாலை, 4.35 மணிக்கு, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச், 19 முதல், 23ம் தேதி வரை, தினமும் காலை, திருமஞ்சனம், இரவு, 7 மணிக்கு வசந்த, விடையாற்றி மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை, தக்கார் கிருஷ்ணன், செயல் அலுவலர் சபர்மதி, நிர்வாகிகள், பொதுமக்கள் செய்துள்ளனர்.