பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
ஊட்டி: மசினகுடி அருகேயுள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில், ஆண்டுதோறும் திருவிழா உற்சாகமாக நடக்கும். இந்தாண்டை விழா, கடந்த 7ம் தேதி துவங்கி நடந்து வருகிறது; அன்று, நடை திறக்கப்பட்டது. விழா நாளான நேற்று முன்தினம் காலை முதல் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, அர்ச்சனை, வழிபாடுகள் நடத்தப்பட்டன. இரவு 10:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. விழாவில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களும் உற்சாகமாக பங்கேற்றனர். இன்று, மாவிளக்கு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி ஆன்மிக அமைப்புகள் சார்பில் 3 நாட்களும் அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில், நீலகிரி மாவட்டம் மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், பொது மக்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, இந்து அறநிலையத் துறையினர், சோலூர் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.