உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். ஓசூர் தேர்ப்பேட்டையில் உள்ள, சந்திரசூடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும், தேர்த்திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா, கடந்த, 9ம் தேதி துவங்கியது. இதைத்தொடர்ந்து, கடந்த, 15ம் தேதி வரை, பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த கட்டளைதாரர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், சிம்ம, ரிஷப, நாக, மயில், யானை வாகன உற்சவமும், திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடந்தது. விழாவை முன்னிட்டு, சந்திரசூடேஸ்வரர் ஸ்வாமிக்கு, புஷ்ப அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேர்த்திருவிழா, நேற்று காலை, 9.15 மணிக்கு துவங்கியது. தேர்த்திருவிழாவை, நகராட்சி தலைவர் பாலகிருஷ்ணாரெட்டி வடம் பிடித்து துவக்கி வைத்தார். விநாயகர் தேர் முன்னே செல்ல, சந்திரசூடேஸ்வரர் மற்றும் மரகதாம்பாள் வீற்றிருந்த தேர்கள் பின்னே சென்றன. முக்கிய மாட வீதிகள் வழியாக சென்ற தேருக்கு, மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேர்கள்  மீது, உப்பு, மிளகு, வாழைப்பழம் ஆகியவற்றை வீசி, லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை, 4 மணிக்கு, மூன்று தேர்களும், நிலையை அடைந்தன. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை முதலே, தேர்ப்பேட்டை பகுதியில், பக்தர்கள் குவிய துவங்கினர். மதியம், 12 மணிக்கு, பக்தர்கள் கூட்டத்தில், தேர்ப்பேட்டை மட்டும் இல்லாமல், ஓசூர் நகரமே ஸ்தம்பித்தது.கடந்த ஆண்டை போல, உயிர் பலி ஏற்படாமல் இருக்க, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவில் தெப்பக்குளத்தை சுற்றி, கம்பு வேலிகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !