உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை.. பண்ணாரி கோவிலில் குண்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நாளை.. பண்ணாரி கோவிலில் குண்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த, பண்ணாரி மாரியம்மன் கோவிலில், நாளை அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர். இதற்காக, ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்மாதம், பங்குனியில் உத்திரம் நட்சத்திரம் அடுத்து வரும் செவ்வாய்கிழமை அதிகாலை, குண்டம் விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான குண்டம் விழா, கடந்த, மூன்றாம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சி மூலம் துவங்கியது. இதையடுத்து பண்ணாரி மாரியம்மன் கடந்த, ஐந்தாம் தேதி சிக்கரசம்பாளையத்தில் வீதிஉலா தொடங்கி வெள்ளியம்பாளையம்புதூர், கொத்தமங்கலம், தொட்டம்பாளையம், உத்தண்டியூர், தாண்டாம்பாளையம், கெஞ்சனூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி உலா சென்றது. அப்போது, பக்தர்கள் தரையில் படுத்து, பண்ணாரி மாரியம்மனை வேண்டினர். வீதி உலாவின் இறுதிநாளான கடந்த, 11ம் தேதி காலை, சத்தியமங்கலம் பகுதியில், உலாவை முடித்து, பாலமுருகன் கோவில் வழியாக, பட்டவர்த்தி அய்யம்பாளையம் சென்று அங்குள்ள மாரியம்மன் கோவிலில் அன்னதானம் முடித்து வடவள்ளி, குய்யனூர், பசுபாபாளையம், ராஜநகர் வழியாக இரவு பண்ணாரி மாரியம்மன் கோவிலை அடைந்தது.

பின் இரவு, 11 மணிக்கு மேல், கோவில் முன் கம்பம் சாட்டும் நிகழ்ச்சி நடந்தது. குழி கம்பத்தில் பக்தர்கள், கற்பூரம் கொளுத்தி கம்பத்தை வழிபட்டனர். தினமும் இரவு கோவில் வளாகத்தில் மலைவாழ் மக்கள் தாரதப்பட்டை மற்றும் பீனாட்சி வாத்திய இசைகளுடன், கம்பத்தை சுற்றி அம்மன் புகழ்பாடும் கழியாட்டம் நடந்து வந்தது. இன்று (17ம் தேதி) இரவு பண்ணாரி மாரிம்மன் கோவில் தெப்பக்குளத்தில், அம்மை அழைத்து வரப்பட்டு, நாளை (18ம் தேதி) அதிகாலை, நான்கு மணிக்கு தலைமை பூசாரி சேகர் முதலில் குண்டம் இறங்குவார். இவரை தொடர்ந்து, பக்தர்கள் குண்டம் இறங்குவார்கள். குண்டம் இறங்க, கடந்த வெள்ளிக்கிழமை முதல், பக்தர்கள் வரிசையில் காத்துள்ளனர். இந்தாண்டு குண்டம் இறங்க, சிறப்பு அனுமதி இல்லை, என்பது குறிப்பிடதக்கது. குண்டம் விழாவை முன்னிட்டு பக்தர்கள், தீச்சட்டி எடுத்து, தங்கள் நேர்த்தி கடனை நிறைவு செய்து வருகின்றனர். நேற்று காலையில் இருந்தே, பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. குண்டம் விழாவை முன்னிட்டு, இன்று காலை முதல் பண்ணாரி மாரியம்மன் கோவில் வளாகங்களை சுற்றி, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவை அறநிலைத்துறை இணை ஆணையர் நடராஜன் தலைமையில், அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !