காஞ்சி ஏகாம்பரநாதர் - ஏலவார்குழலி திருக்கல்யாணம் கோலாகலம்!
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் - ஏலவார்குழலி திருக்கல்யாணம் கோலாகலமாக, நேற்று காலை நடந்தது. ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம், கடந்த 7ம் தேதி துவங்கியது. சிறப்பு திருமஞ்சனம் இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவான வெள்ளி தேர், திருத்தேர் திருவிழா, வெள்ளி மாவடி சேவை ஆகியவை சிறப்பாக நடந்தது. பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான நேற்று, காலை திருக்கல்யாணம் உற்சவம் வெகு சிறப்பாக நடந்தது. ஏகாம்பரநாதருடன் ஊடல் கொண்டு, நேற்று முன்தினம் காலை ஏலவார்குழலி அம்மன், ஒக்கப்பிறந்தான் குளம் அருகில் உள்ள, மண்டபத்திற்கு சென்று விடுகிறார். அவரை அழைப்பதற்காக, காமாட்சி அம்மன், ஆதி காளிகாம்பாள், கன்னியம்மன் ஆகிய மூன்று அம்பாள்களும், நேற்று முன்தினம் இரவு அங்கு எழுந்தருளினர். அவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. பின்னர், ஏலவார்குழலியை, தோழிகளான மற்ற மூன்று அம்பாளும், ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள, 16 கால் மண்டபத்திற்கு நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு அழைத்து வந்தனர். பின் ஏலவார்குழலி அம்மனை கம்பா நதிக்கு நீராட அனுப்பிவிட்டு, அவரவர் சன்னிதிக்கு திரும்பினர். நள்ளிரவு 2:00 முதல் நேற்று அதிகாலை 4:00 மணி வரை ஏலவார்குழலி அம்மன் கம்பா நதியில் மணலால் லிங்கம் அமைத்து, பூஜித்த தல வரலாற்று நிகழ்ச்சி நடந்தது. திருவீதி உலா அதன் பின் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலிக்கு அங்கு மாலை மாற்றப்பட்டு, ஆயிரம்கால் மண்டபத்தின் மீது, திருக்கல்யாணம் நடக்கும் இடத்தில் எழுந்தருளினர். அதிகாலை 5:15 மணியளவில், திருக்கல்யாணம் நடந்தது. அதை தொடர்ந்து, திருமண கோலத்தில் தங்க இடப வாகனத்தில் ஏகாம்பரநாதரும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், ஏலவார்குழலி அம்மனும் எழுந்தருளி, காலை 6:30 மணிக்கு திருவீதிவுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.