பொன்னியம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை கோலாகலம்!
ஆர்.கே.பேட்டை : பொன்னியம்மன் கோவிலில், பவுர்ணமி பூஜை கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து, அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆர்.கே.பேட்டை பொன்னியம்மன் கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்கு பின், பவுர்ணமி பூஜை நடந்தது. காலை, 10:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, கூழ் வார்க்கப்பட்டது. மாலை, 6:00 மணியளவில், அம்மன் வாண வேடிக்கையுடன், கோவில் வளாகத்தில் உலா வந்தார். பவுர்ணமி நிலவு ஒளியில், அம்மன் தரிசனம் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. பூஜையை ஒட்டி, கோவில் வளாகம் வேப்பிலை தோரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பம்பை, உடுக்கை முழங்க அம்மன் பாராயணம் நடந்தது. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டு, ஓம் சக்தி, பராசக்தி என, கோஷமிட்டனர். வேண்டுதல் நிறைவேற விரதம் மேற்கொண்டிருந்த பெண்கள், இரவு, கோவில் வளாகத்தில் தங்கியிருந்தனர்.