34 ஆண்டுகளுக்கு பிறகு.. குன்றக்குடி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
காரைக்குடி: சிவகங்கை மாவட்டத்தில் புகழ்பெற்ற குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில், கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. இக்கோயிலில் 1979 க்கு பிறகு 34 ஆண்டுகள் கழித்து, தற்போது மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இதற்காக, இக்கோயில் விமானங்கள், சந்நிதி மண்டபங்கள், ராஜகோபுரம் ஆகியவையும் புனரமைப்பு பல்வேறு பணிகள் நடந்து முடிந்துள்ளது. கும்பாபிஷேக விழா, மார்ச் 16 ல் காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. யாகசாலை பூஜை, நேற்று காலை வரை 6 காலங்களாக நடந்தது. சண்முக பெருமானுக்கு 33 யாக குண்டங்களும், பரிவார மூர்த்திகளுக்கு 12 யாக குண்டங்களும், உத்தம பட்ச யாக சாலையாக அமைக்கப்பட்டு, பிள்ளையார் பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் பூஜைகள் நடந்தன. நேற்று காலை 9:30 மணிக்கு, விமானம், மூலவர் சன்னதிக்கு திருக்குட நன்னீராட்டு விழா, சிவாச்சாரியார்கள் தலைமையில் நடந்தது. பக்தர்கள் "அரோகரா கோஷம் முழங்க, முருகனை வழிபட்டனர். மாலை 5:00 மணிக்கு அபிஷேகம், இரவு 10:00 மணிக்கு பஞ்சமூர்த்தி திருவீதி உலா நடந்தது. நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் பெரியகருப்பன், சோழன், சித.பழனிச்சாமி, அறநிலையத்துறை உதவி ஆணையர் ரோசாலி சுமதா, டி.எஸ்.பி., முருகேஷ், உதவி கோட்ட பொறியாளர் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையில், ஊராட்சி நிர்வாகத்தினர், உபயதாரர்கள் செய்திருந்தனர்.
பக்தர்கள் ஏமாற்றம்: விமானங்களுக்கு காலை 9:30 மணிக்கும், மூலவர் சன்னதிக்கு காலை 10:00 மணிக்கும் திருக்குட நன்னீராட்டு விழா நடக்கும், என அழைப்பிதழ் மற்றும் பிளக்ஸ் போர்டுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், காலை 9:25 மணிக்கே, விமானம், மூலவர் சன்னதிக்கு திருக்குட நன்னீராட்டு முடிந்தது. அறிவித்த நேரத்தை விட, முன்கூட்டியே கும்பாபிஷேகம் நடத்தியதால், வெளியூரிலிருந்து விழாவை காண வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். குன்றக்குடிகோயில் வாசலிலிருந்து, ஓ.சிறுவயல் செல்லும் சாலையில், போதிய போலீசார் இல்லாததால், ரோடுகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், 2 மணி நேரம் பக்தர்கள் நெரிசலில் சிக்கி தவித்தனர்.