திருவிழாவில் கலக்கும் நல்லம்பள்ளி மிட்டாய்: பக்தர்களின் ரசனைக்கேற்ப தயாரிப்பு!
தர்மபுரி: ஆண்டுதோறும், இரு திருவிழாக்களில் மட்டும், கடந்த பல ஆண்டுகளாக ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் பரம்பரை, பரம்பரையாக தேங்காய் மிட்டாய் மற்றும் ஜாங்ரி உற்பத்தி செய்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில், இந்து பண்டிகைகள் மற்றும் கோவில் திருவிழாக்கள் தொன்றுதொட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை காளியம்மன் கோவில் திருவிழா, 23 நாட்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இத்திருவிழாவின் போது, கடந்த பல ஆண்டுகளாக நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த மிட்டாய் வியாபாரிகள், கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில், பல வண்ணங்களில் தேங்காய் மிட்டாய் மற்றும் ஜாங்கரி தயாரித்து விற்பனை செய்வது வழக்கம். கோவில் திருவிழாவுக்கு வரும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சுவை மிக்க தேங்காய் மிட்டாய் மற்றும் ஜாங்கரியை வாங்கி ருசித்து வந்தனர். ஆண்டும் தோறும் நல்லம்பள்ளியை சேர்ந்த வியாபாரிகள், இங்கு பல கடைகள் அமைத்து தேங்காய் மிட்டாய், ஜாங்கரி விற்பனையில் ஈடுபட்டதால், இக்கோவில் விழாவில், இவர்கள் தயாரிக்கும் தேங்காய் மிட்டாய் பிரதான இடத்தை பிடித்தது.
இதேபோன்று, இவர்கள் இண்டூரில் நடக்கும் தை திருவிழாவின் போது, அப்பகுதியில் தேங்காய் மிட்டாய் விற்பனை செய்வது வழக்கம். இதனால், ஆண்டுதோறும் அதியமான்கோட்டை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும், இண்டூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பொதுமக்களும், கோவில் திருவிழாவை ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருப்பதாக, வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, நல்லம்பள்ளியை சேர்ந்த தேங்காய் மிட்டாய் வியாபாரி சண்முகம் கூறியதாவது: எங்கள் முன்னோர்கள், கடந்த பல ஆண்டுகளாக அதியமான்கோட்டை மற்றும் இண்டூர் கோவில் திருவிழாக்களில் மட்டும், தேங்காய் மிட்டாய் மற்றும் ஜாங்கரி தயாரித்து விற்பனை செய்து வந்தனர். தரமாகவும், சுவையாகவும், எங்கள் முன்னோர்கள் இனிப்பு பண்டங்களை தயாரித்து, விற்பனை செய்து வந்தனர். இதனால், இத்திருவிழாக்கள் என்றால், எங்கள் தேங்காய் மிட்டாய் மற்றும் ஜாங்கரி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. பரம்பரையாக, ஆண்டுக்கு சில தினங்கள் மட்டும் இனிப்பு பண்டங்களை விற்பனை செய்வதாலும், பொதுமக்களின் எதிர்பார்ப்பு காரணமாகவும், எங்கள் குடும்பத்தினர் தொடர்ந்து அதியமான்கோட்டை காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா மற்றும் இண்டூர் தை திருவிழாவில் மட்டும் தேங்காய் மிட்டாய் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறோம். தேங்காய், சர்க்கரை உள்ளிட்டவற்றின் விலை ஏற்றத்தால் தற்போது, ஒரு கிலோ தேங்காய் மிட்டாய் மற்றும் ஜாங்கரி, 120 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம், என்றார்.