உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மி மிதித்து அருந்ததி பார்த்து.. திருப்பரங்குன்றத்தில் திருக்கல்யாணம் கோலாகலம்!

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து.. திருப்பரங்குன்றத்தில் திருக்கல்யாணம் கோலாகலம்!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி,தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது. நாளை காலை தேரோட்டம் நடக்கிறது. பங்குனித் திருவிழா முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்தை முன்னிட்டு அதிகாலை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை ஆகியோர் திருமண அலங்காரத்தில் மூலக்கரை சந்திப்பு மண்படத்தில் எழுந்தருளினர். முன்னதாக, மதுரை கோயிலில் இருந்து புறப்பாடாகிய மீனாட்சி அம்மன், பிரியாவிடை, சுந்தரேஸ்வரர், சந்திப்பு மண்டபம் வந்தனர். பெற்றோரை, சுப்பிரமணி யசுவாமி வரவேற்கும் நிகழ்ச்சி முடிந்து, கோயில் ஒடுக்க மண்டபத்தில்  சுவாமிகள் எழுந்தருளினர்.

திருக்கல்யாணம்: கண்ணூஞ்சல் நிகழ்ச்சி முடிந்து ஆறுகால் பீடத்தில் முதலில் மீனாட்சி அம்மன், அடுத்ததாக பிரியாவிடை, சுந்தரேஸ்வரரை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். தங்கம், வெள்ளி குடங்களில் புனிதநீர் நிரப்பி, பூஜைகள் நடந்தன. மாங்கல்ய பூஜைக்குப்பின்பு, சுவாமிகளுக்கு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டன. மாப்பிள்ளை பிரதிநிதியாக  சுந்தரம், பெண் பிரதிநிதியாக  ரமேஷ் சிவாச்சார்யார்கள் மாலை மாற்றி திருமண சம்பிரதாயங்கள் செய்தனர். சுப்பிரமணிய சுவாமிக்கு வெண் பட்டும், தெய்வானைக்கு பச்சை பட்டும் சாத்துப்படியானது.  மீனாட்சி அம்மன், சொக்கநாதர், பிரிவியாவிடையிடம் திருமாங்கல்யம் ஆசி பெறப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. அம்மி மிதித்து அருந்ததி பார்த்த பின்பு தீபாராதனைகள் நடந்தது. நாளை காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !