ஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் செப்புத்தேர்: ரூ.10 லட்சம் செலவில் புதுப்பிப்பு!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 10 லட்சம் ரூபாய் செலவில் செப்புத்தேர் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் ஆண்டாள்,ரெங்கமன்னார் செப்புதேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளும் சுற்று வருவது வழக்கம். அதே போல் ஆனி சுவாதி திருவிழாவில் பத்தாம் திருவிழாவன்று பெரியாழ்வாரும், புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் ஒன்பதாம் நாளன்று புட்டாசி திருவோணம் நட்சத்திரத்தன்று வடபத்ரசாயி பெருமாளும் செப்பு தேரில் எழுந்தருளி ரதவீதி சுற்று வரும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது .ஆண்டுக்கு மூன்று முறை இழுக்கப்படும் இந்த தேர் சிறியதாக இருந்தாலும், இதன் சக்கரங்கள் மரத்தால் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக இத்தேர் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதில் உபயதாரர் செலவில் இத்தேருக்கு நான்கு சக்கரமும் இரும்பால் செய்யப்பட்டு பொருத்தும் பணி நேற்று நடந்தது. தக்கார் ரவிச்சந்திரன், செப்புத்தேர் 10லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதில் தலா ஒரு டன் கொண்ட நான்கு இரும்பு சக்கரங்கள் 4.5லட்ச ரூபாய் செலவில் பொருத்தப்பட்டு வருகிறது, என்றார்.