புதுப்பொலிவுடன் திருப்புல்லாணி கோயில் தேர்: ஏப்.,5ல் பிரம்மோற்சவ விழா துவக்கம்!
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பங்குனி பிரம்மோற்சவ விழா, ஏப்.,5ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இந்த கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. திருமங்கையாழ்வாரின் 20 பாடல்களால், மங்களாஸாசனம் செய்யப்பெற்றது. இந்த கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா, ஏப்,5ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப்., 8ல் கருடசேவை, ஏப்.,10ல் திருக்கல்யாணம், ஏப்.,13ல் தேரோட்டம், ஏப்.,14ல் தீர்த்தவாரி, ஏப்.,15ல் நாச்சிமார்களுடன் பெருமாள் சுவாமி வானமாமலை மடத்திற்கு எழுந்தருளுதல் நடைபெறுகிறது. ஏப்., 5 முதல் 14 வரை காலை மற்றும் மாலையில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாக செயலாளர் மகேந்திரன், அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் கண்ணன் செய்து வருகின்றனர்.
புதுப்பொலிவில் தேர்: கோயில் தேர் கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்தது. பங்குனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தற்போது தேருக்கு புதிய பலகைகள் பொருத்தி, வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.